''என்னது ஓட்டு போட்டாச்சா?'' அடம்பிடித்து வாக்களித்த மாற்றுத்திறனாளி
மாற்றுத் திறனாளியான துப்புரவு பணியாளர் லட்சுமி.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் மாற்றுத் திறனாளி லட்சுமி, பணி முடித்து தனது வாக்கினை பதிவு செய்ய 11-வது வார்டு வாக்குச் சாவடிக்கு வாக்குச்சீட்டுடன் வந்திருந்தார். ஆனால் 11-வது வார்டு வாக்குச் சாவடியில் லட்சுமி பெயரில் வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைக்கேட்ட மாற்றுத்திறனாளி லட்சுமி, தான் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணி செய்து வருவதாகவும், காலை முதல் மதியம் வரை பணி முடித்துவிட்டு, தற்போது தான் வாக்குப்பதிவு செய்வதற்காக வந்துள்ளேன். என்னுடைய வாக்குச் சாவடி சீட்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தார். ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்பதைக் கேட்டு நான் வாக்குப்பதிவு செய்யவில்லை. எனது வாக்கை நான் செலுத்தி ஆக வேண்டுமென வாக்குச்சாவடியில் அமர்ந்தார்.
இதனையடுத்து, ஏற்கனவே அவரது வாக்கு பதிவு செய்யப்பட்டது எனக்கூறி, வாக்குச்சாவடி முகவர்கள் மறுப்பு தெரிவித்தால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் வாக்குச்சாவடிக்குள் வந்து சமரசம் செய்து, ஆய்வுக்குரிய பட்டியல் முறையில் வாக்குச் சீட்டில் வாக்களிக்க அனுமதித்து, படிவங்களை பூர்த்தி செய்தனர். இதன் பிறகு ஆய்வுக்குரிய பட்டியல் முறையில் வாக்குச் சீட்டை பயன்படுத்தி மாற்றுத்திறனாளியான துப்புரவு பணியாளர் லட்சுமி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
மாற்றுத் திறனாளியான துப்புரவு பணியாளர் லட்சுமி உறுதியாக நின்று தனது வாக்கை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றியது பார்ப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல், அதே 11-வது வார்டில் சரவணன் என்பவர் வாக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால், அவரும் ஆய்வுக்குரிய பட்டியல் முறையில் வாக்குச் சீட்டு மூலம் தனது வாக்கை பதிவு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu