நடவு செய்த 20 நாட்களில் விளைந்த ஆந்திர நெல் ரகம், அதிர்ச்சியில் விவசாயிகள்

நடவு செய்த 20 நாட்களில் விளைந்த ஆந்திர நெல் ரகம், அதிர்ச்சியில் விவசாயிகள்
X

நெற்பயிர் - காட்சி படம் 

60 நாட்களுக்குப் பிறகு நெற்பயிரில் கதிர் வைத்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைக்கும். நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் கதிர் வைத்ததால், விவசாயிகள் அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் பருவமழை கைகொடுக்கும் காலங்களில் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால், விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரூர் பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் குறிப்பிட்ட ஒரு அக்ரோ சர்வீஸ் கடையில் ஈஸ்வரி 22 என்ற ஆந்திர வகை விதை நெல்லை வாங்கி நாற்று வைத்து நெல் பயிர் நடவு செய்துள்ளனர். இந்த ஈஸ்வரி 22 விதை நெல்லை வாங்கி சென்ற விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்து ஒரு மாதம் முடிவுறும் நிலையில் நடவு செய்த 20 முதல் 30 நாட்களிலேயே கதிர் வைக்க தொடங்கியுள்ளது.

இந்த நெல் 3 மாத கால பயிர் என்பதால், 60 நாட்களுக்குப் பிறகு பயிரில் கதிர் வைத்தால் மட்டுமே, நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் கதிர் வைத்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடவு செய்த பயிர்கள் வேரூன்றி, களை பறிப்பதற்குள்ளாகவே, தற்பொழுது கதிர் வைத்துள்ளது. இந்த நெற்கதிர்கள், பால் பிடித்து மகசூல் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு உரம் வைத்து, தண்ணீர் பாய்த்து, எவ்வளவு செலவு செய்தாலும், கதிர் ஆகாமல் அப்படியே காய்ந்து விடும் சூழல் இருந்து வருகிறது. இதனால் நெல் மணிகள் கிடைக்காமல் வெறும் கால்நடைகளுக்கான வைக்கோல் மட்டுமே கிடைக்கும்.

இதனையடுத்து விதை நெல் வாங்கிய குறிப்பிட்ட அக்ரோ சர்வீஸ் கடைக்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். இந்த கடையில் ஈஸ்வரி 22 ஆக விதை நெல் சுமார் பத்து டன்னுக்கு மேல் விற்பனை செய்ததாகவும், விதை நெல்லை வாங்கி பயிரிட்ட விவசாயிகள் அனைவரும் இதுபோன்ற புகார் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரையிலும் இந்த நெற்பயிர்களை ஆய்வு செய்ய விதை நிறுவனத்தினர் வரவில்லை. இதனால் அரூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

விதைகள் வாங்கியது, நாற்று வைத்தல், நடவு செய்தல் போன்ற பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர். மேலும் இந்த பயிரை அழித்துவிட்டு வேறு பயிர் செய்ய வேண்டும் என்றால், மேலும் ரூ. 20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றன.

இது குறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், அரசு அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை. அரசு வேளாண் துறை அலுவலகத்தில் ஆடு துறை-39 (ஏடிடி-39) என்ற ரகம் மட்டுமே விற்பனை செய்வதால், விவசாயிகள் வேறு ரகங்களை தேடி தனியார் நிறுவனங்களை நாட வேண்டிய தேவை உள்ளது. விவசாயிகளை மோசடி செய்த ஈஸ்வரி 22 ரக விதை நெல் விற்பனையாளர் மற்றும் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகை நெல் ரகங்களையும் வேளாண் துறையினர் விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து அரூர் வேளாண்துறை அலுவலர் கூறுகையில், அரூர் பகுதியில் ஈஸ்வரி 22 ஆக விதை நெல் தரம் இல்லாமல், 20 நாட்களிலேயே கதிர் வைத்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து துணை இயக்குனர் விதை ஆய்வாளருக்கு, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதை குறித்து ஆய்வு செய்து சட்டரீதியாக நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விதை நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற முடியும்.

ரசு வேளாண் அலுவலகம் மூலமாக விதை நெல் கிலோ ரூ.20-க்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களை விட்டு சிறிய ரக நெல் வேண்டுமென்ற மோகத்தால் விவசாயிகள் தனியாரை நாடி சென்று, கிலோ ரூ.100 கொடுத்து வாங்கி வருகின்றனர். நமது விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை மறந்து சிறிய ரக நெல் கேட்கிறார்கள், அதனை அரசு மூலம் விற்பனை செய்ய முடியாது. நம்மிடம் பாரம்பரிய நெல் ரகங்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!