டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக விலை குறைந்த சூப்பர் பாஸ்பேட்: வேளாண் இணை இயக்குநர்
பைல் படம்.
டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக விலைக்குறைவான சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம் என்று தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து, சல்பர், கால்சியம் மற்றும் சிறிதளவு நுண்ணூட்ட உரங்கள் உள்ளது.
சூப்பர் பாஸ்பேட் உரத்தில் மட்டுமே சல்பர் சத்து கிடைக்கிறது. மேலும் நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால் பயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் எண்ணெய் வித்து பயிர்களில் சல்பர் அதிகம் தேவைப்படுவதால் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் வித்து மகசூல் அதிகம் கிடைக்கிறது.
சூப்பர் பாஸ்பேடில் உள்ள பாஸ்பேட் எளிதில் கரையும் உரம் என்பதால் சூப்பர் பாஸ்பேட் என பெயர் பெற்றுள்ளது. எனவே தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள எண்ணெய் வித்து பயிர்களுக்கு கந்தகச் சத்து அதிகம் தேவைப்படுவதால் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் மகசூல் அதிகம் கிடைக்கிறது.
தற்போது தர்மபுரி மாவட்டத்தில் மணிலா பெரும் அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள எண்ணெய்வித்து பயிர்களான தென்னை, நிலக்கடலை பயிர்கள் மற்றும் கரும்பு பயிர்கள், தோட்டக்கலை பயிர்களுக்கு தேவைப்படும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை வாங்கி பயன்பெறலாம்.
அடியுரமாக ஏக்கருக்கு மணிலாவிற்கு 87 கிலோவும், எள்ளுக்கு 56 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும். எதிர்வரும் நவரை நெல் பயிருக்கு அடியுரமாக 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 44 கிலோ யூரியாவினை அடியுரமாக டிஏபிக்கு மாற்றாக இட்டு உர செலவை குறைக்கலாம்.
வளர்ந்த தென்னை மரத்திற்கு ஒரு கிலோ 200 கிராம் சூப்பர் பாஸ்பேட், இரண்டு கிலோ பொட்டாஷ் உரமிட்டு பயன்பெறலாம். ஒரு மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தின் விலை ரூ.385 ஆகும். எனவே, விவசாயிகள் டிஏபிக்கு பதிலாக குறைவான விலையில் கிடைக்கும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu