தவமாய் தவமிருந்து: தடுப்பூசிக்கு காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

தவமாய் தவமிருந்து: தடுப்பூசிக்கு காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்
X

அரூரில்,  கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள 5 மணி நேரமாக காத்திருந்த  பொதுமக்கள்.

அரூரில், முகாமில் 5 மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில், அரூர் தனியார் நர்சிங் கல்லூரி, கூத்தாடிபட்டி சின்னாங்குப்பம் தீர்த்தமலை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறப்பு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு, நேற்று முன்தினம் முதல், மீண்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அரூர் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் உள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள, காலை 7 மணிக்கே பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் பத்து மணி ஆகியும் தடுப்பு ஊசியோ, தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர்களோ வரவில்லை.

காத்திருந்தவர்களில் சிலர், தடுப்பூசி முகாமில் இருந்த ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, தருமபுரியில் இருந்து தடுப்பூசி வருவதற்கு ஒருசில மணி நேரம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மதியம் ஒரு மணிக்கு பிறகும் தடுப்பூசி, முகாமிற்கு எடுத்து வரவில்லை.

மேலும், இன்று தடுப்பூசி போடப்படுகிறதா? இல்லையா? என்பது குறித்த தகவலும் பொதுமக்களுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை. இதனால் காலை 7 மணி முதல், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக முதியவர்கள், பெண்கள் என, ஏராளமானானோர், அங்கேயே காத்திருந்தனர்.

சுகாதாரத்துறையினர் முறையாக அறிவிப்பு வெளியிடாததால், இத்தகைய முகாம்களில் பொதுமக்களின் அவதி தொடர்கிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து