அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம் கலையுமா?

அரூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகள் தூக்கம் கலையுமா?
X

அரூர் நகர் பகுதியில், கொரோனா  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் இல்லாததால் விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகள்.

அரூர் நகர் பகுதியில், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, கடைகள் செயல்பட தொடங்கி இருப்பது, சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

தமிழகத்தில், பெருந்தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதால், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், தற்போது வரை ஜவுளி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க, அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தருமபுரி மாவட்டம் அரூரில், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி துணிக்கடைகள் திறந்து விற்பனை நடைபெற்று வருகிறது.

அரூர் நகர்ப்பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தீவிரப்படுத்தும் பேரூராட்சி செயல் அலுவலர், கொரோனா தொற்று பாதிப்பால், விடுப்பில் உள்ளார். அரூர் டிஎஸ்பியாக வி.தமிழ்மணி, பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அந்த இடத்திற்கு இன்னும் பணியமர்த்தப்படவில்லை.

எனவே, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இல்லாததால், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாமல், அரூர் நகர் பகுதிகள் சில ஜவுளி கடைகள் பாதியாக திறந்தும், சில கடைகள் முழுமையாகவே திறந்து சாதாரண நாட்களை போலவே விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனால், ஏராளமான மக்கள் கடைகளில் கூடி வைரஸ் தொற்று எளிமையாக பரவும் அபாயம் இருப்பதால், சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself