காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

கோப்புப்படம்

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 142 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரம்தோறும் தர்மபுரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 166 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. காவல் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் 142 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 24 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் நாகலிங்கம், காவல் ஆய்வாளர்கள் ரங்கசாமி, சுரேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!