காரிமங்கலம் அருகே தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்த கும்பல்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட கோவை மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, ஆகியோர்
காரிமங்கலம் அருகே 6 கிலோ தங்கம் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்தது அம்பலமானது. மேலும், கைதான 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோவையைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர் கடந்த மாதம் 28ம் தேதி கர்நாடகாவில் இருந்து தங்க நகைகள் வாங்கி காரில் புறப்பட்டு கோவைக்கு வந்தார்.
அவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே, வண்டியை வழிமறித்து உள்ளே இருந்தவர்களை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி காருடன் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதனை அடுத்து நகை கடை உரிமையாளர் பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் காவல் உதவி கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
அதில் அவர்கள் கொள்ளையடித்து தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் காரில் சுற்றி அலைந்து விட்டு மறுநாள் தப்பி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த குற்றவாளிகளை 10 தனிப்படையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இதில் சென்னையில் கடத்தப்பட்ட தங்கம் 6 கிலோ மற்றும் ரூ. 19.50 லட்சம் பணம் பிடிப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் சுஜித், சரத், பிரவீன் தாஸ், ஆகிய 3 பேரை கோவையில் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சீரல் மேத்யூ ஆகிய 2 பேரையும் சென்னையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளிடம் இருந்து 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 60 லட்சம் பணத்தில் இருந்து ரூ. 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சொகுசு கார் வாங்கியுள்ளனர். இதேபோல் வேறு ஒரு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது ஒரு கார் வாங்கியுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார் என மொத்தம் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, ஆகியோர் நேரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், நகைக்கடை வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து திட்டம் போட்டு அவர்களிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களின் செல்போன் அழைப்புகளை எளிதில் கண்டுபிடித்து விடாத படியான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், இவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்தவன் இதுவரை சிக்கவில்லை. அவனை பிடிக்க காவல்துறையினர்தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் பணத்தை மட்டுமே குறி வைத்து திட்டமிட்டு கொள்ளையடித்து பங்கு பிரித்துக்கொண்டு தப்பி செல்லும் கும்பல் என்றும், பெங்களூரில் இருந்து வந்த காரில் பணம் மற்றும் தங்கம் இருப்பதை நோட்டமிட்டு அறிந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.
உடனடியாக தங்கத்தை விற்றால் எப்படியும் பிடிபட்டு விடுவோம் என நினைத்து பதுக்கி வைத்திருந்தனர். அதனையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள கும்பலின் முக்கிய தலைவன் உட்பட 6 பேரை பிடிக்க அதிரடி தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது.
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையர்கள் 9 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu