கருவில் உள்ள குழந்தை குறித்து சட்டவிரோத பரிசோதனை: ஐந்து பேர் கைது
சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்த கும்பல்
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே செம்மண்குழிமேடு என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக புரோக்கர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து,
அதன் பேரில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் காரிமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் செம்மண்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது தர்மபுரி அருகே அழகாபுரி 3-வது தெருவை சேர்ந்த கற்பகம் என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற பரிசோதனை மேற்கொண்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் மற்றும் தர்மபுரி ஆசிரியர் காலனியை சேர்ந்த புரோக்கர் சிலம்பரசன், நல்லம்பள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ், வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஸ்கேன் எந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார், 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில் கைதான பயிற்சி செவிலியர் கற்பகம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று தர்மபுரி பகுதியில் கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள சிசு குறித்து பரிசோதனை செய்ததாக செவிலியர் கற்பகத்தை தர்மபுரி நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அவரது கணவர் உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக ஆணா? பெண்ணா? என்று பரிசோதனை செய்து வந்தார். அதில், பெண் சிசு இருந்தால் கருக்கலைப்பும் செய்து வந்தார். இந்த கும்பல் கடந்த 2 வருடங்களாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கருப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவந்தது.
இதற்காக அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஊர்களில் தலா ஒரு புரோக்கரை நியமித்து தொடர் நெட்வெர்க் போல் செயல்பட்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது. திருமணம் முடித்து கர்ப்பம் தரிக்கும் பெண்களை குறி வைத்து செயல்பட்டு வந்தனர்.
மேலும் அந்த கும்பல் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று பார்ப்பதற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலித்துள்ளனர். பெண் சிசு இருந்தால், அதனை கலைக்க ரூ.15 ஆயிரம் முதல் பணம் வசூலித்தது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu