பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
X

மலையுச்சியில் காணப்பட்ட சிறுத்தை 

பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாமனூர் கிராமமானது வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதி அருகே உள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் விலங்குகள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தூக்கி செல்வதும் உண்டு.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுத்தைப்புலி ஒன்று கிராமத்துக்குள் புகுந்துள்ளதாக கிராம மக்கள் இடையே தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் கிராம மக்கள் சார்பில் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சாமனூர் கிராமத்துக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தைப்புலி வந்ததாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டனர். அதில் காலையில் அங்குள்ள ஜனப்பனூர் மலைப்பகுதிக்கு சிறுத்தைப்புலி வந்துள்ளது. பின்னர் அது மலை உச்சியில் அமர்ந்து இருந்ததை சிலர் கீழே இருந்து படம் எடுத்துள்ளனர். இதையடுத்து சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பேசி கூண்டு கேட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் கூறுகையில், கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்பவர்கள் கவனமுடன் சென்று வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..