தக்காளி விலை வீழ்ச்சி: சாலையோரம் கொட்டி அழித்த விவசாயிகள்
சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் தக்காளி விலையின் உயர்வு கடுமையாக அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தியது. தக்காளி விலை உயர்வு காரணமாக சாமான்ய மக்கள் பாதிப்படைந்ததால் தமிழகத்தில் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் ரூ.200 முதல் ரூ.300 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையானது.
இதனை தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை சரிய தொடங்கி தற்போது கிலோ ஒன்று ரூ.15 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தக்காளி சாகுபடியில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், இருமத்தூர், கம்பைநல்லூர், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தக்காளியின் விலை உயர்வு மாற்றத்தை கருத்தில் கொண்டு தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தக்காளி விளைச்சலில் அதிகளவில் ஈடுபட்டனர். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தக்காளி விதைகளை மானிய விலையில் வேளாண்துறையில் வாங்கி பயிரிட்டு பராமரித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிடப்பட்ட தக்காளி நல்ல விளைச்சல் கொடுத்தது. அதனை விவசாயிகள் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றனர்.
பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரித்ததால், தக்காளி ஒரே கூடை ரூ.200 வரை மொத்த வியாபாரிகள் விலை கேட்டதாக தெரிகிறது. மேலும், சில்லரை விற்பனைக்கு கிலோ ஒன்று ரூ.14 வரை விற்பனையானது.
இதனால் மனம் வெறுத்த விவசாயிகள் குறைவான விலைக்கு தக்காளியை கொடுத்தால், வண்டி வாடகைக்கு கூட கட்டுப்படியாகது என்பதால், பென்னாகரம் பகுதியில் உள்ள தங்கள் தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை சாலையோரம் கொட்டி அழித்து வருகின்றனர். இதேபோன்று தர்மபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள பிளியானூர் பகுதியில் விவசாயிகள் தக்காளிகளை அழுக்கும்படி செடியிலேயே விட்டு விட்டனர்
உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை குறைந்த விலைக்கு கொடுக்க மனமில்லாமல் இதுபோன்று செய்து வருகின்றனர். அரசு காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயித்தால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu