தர்மபுரி ஆவின் நிர்வாகத்தின் மீது விவசாயிகள் புகார்

தர்மபுரி ஆவின் நிர்வாகத்தின் மீது விவசாயிகள் புகார்
X

தர்மபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தர்மபுரி ஆவின் நிர்வாகத்தின் மீது விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகள் குறித்து தெரிவித்தனர்.

அப்போது விவசாயிகள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பிரதாபன் தர்மபுரி மாவட்டத்தில் ஆவின் நிர்வாகத்தில் சீர்கேட்டால் ஆவின் செயல் இழந்துள்ளது என தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆவின் கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிர்வாகத்திற்கு பால் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொடுத்து வரும் விவசாயிகளுக்கு முறையான விலையை கூட்டுறவு சங்கங்கள் வழங்குவதில்லை. பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு உடனடியாக பணமும் வழங்குவதில்லை. ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு கூடுதல் விலை கொடுத்து உடனுக்குடன் பணத்தை வழங்குவதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாலை தனியாருக்கு கொடுத்து வருகின்றனர்.

இதனால் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது 50,000 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றன. தர்மபுரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் ஒரு வருட காலமாக செயல்படாமல் முடங்கியுள்ளது. அதனால் தர்மபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டும் குளிர் பதன வசதி இல்லாததால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணை, நெய், பன்னீர் உள்ளிட்ட பால் உபயோக பொருட்கள் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆவின் கொள்முதல் செய்யும் பாலை முறையாக பாக்கெட் செய்து நகர பகுதி முதல் கிராமப் பகுதிகள் வரை வழங்க வேண்டும். ஆனால் தர்மபுரி ஆவின் நிர்வாகத்திடம் பால் குளிரூட்டி பாக்கெட் செய்யும் வசதிகள் இல்லாததால் தர்மபுரி ஆவின் நிர்வாகம் பெறப்படும் பாலை சென்னை ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் தங்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை கிருஷ்ணகிரி ஆவின் பால் நிர்வாகத்திடம் இருந்து பெற்று விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது போன்ற குளறுபடிகளால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தனியாருக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். தனியார் பால் நிறுவனத்தினர் தங்களுடைய கொள்முதல் செய்யும் பாலை பல வடிவமைப்புகளில் பாலை பாக்கெட் செய்து நகர முதல் கிராம பகுதி வரை விடியற்காலை 4 மணிக்குள் பொதுமக்களிடத்தில் சேர்த்து வருகின்றனர். இதற்கு போட்டியாக செயல்பட வேண்டிய ஆவின் நிர்வாகம் நிர்வாக சீர்கேட்டினால் செயல் இழந்து உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!