தர்மபுரி ஒட்டப்பட்டியில் சீரமைக்கபடாத சாலை; எம்எல்ஏ., ஆய்வு

தர்மபுரி ஒட்டப்பட்டியில்  சீரமைக்கபடாத சாலை; எம்எல்ஏ., ஆய்வு
X

தர்மபுரி ஒட்டப்பட்டி பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி ஒட்டப்பட்டியில் கடந்த 2 மாதங்களாக சீரமைக்கபடாத சாலையை எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லும் சாலையை புதிய சாலையாக அமைக்க ஒப்பந்ததாரர் சாலை சீரமைப்பு பணியை தொடங்கியுள்ளார்.

ஆனால், ஒப்பந்ததாரர் பணியை முடிக்காமல் சாலையில் ஏற்கனவே இருந்த கல் மற்றும் மண்களை தோண்டிவிட்டு இரண்டு மாதங்களாக அப்படியே விட்டுச் சென்றதால் இந்த வழியை பயன்படுத்தும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதனால் முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இப்பகுதி பொதுமக்கள் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமாரை வரவழைத்து, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அப்பகுதியில் ஆய்வு நடத்தினார் .

உடனடியாக இரண்டு வாரத்திற்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து தர்மபுரி வள்ளுவர் நகரில் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்டார். அங்கு கூடுதலாக விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய கூடுதல் கடைகளை ஏற்படுத்தி தர உழவர்நலன் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story