தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்

தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்.

தர்மபுரி தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம், நள்ளிரவில் சேலத்துக்கு சென்று கொண்டிருந்தது. தொப்பூர் புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியில் பழுது ஏற்பட்டது. வாகனத்தில் பழுது நீக்கும் பணியில், திருச்சி மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் பாரம் ஏற்றி, சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியின் பின்னால் வந்த சரக்கு பெட்டக லாரி மற்றும் அதனையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என, அடுத்து வாகனங்கள் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின.

இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த ரத்தினவேல் உள்பட இருவர் நிகழ்விடத்திலிலேயே உயிரிழந்தனர். விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), மாரியப்பன் (28), திருச்சியைச் சேர்ந்த பாண்டியன்(30), பகவதி ராஜ்(34), மதன்குமார்(25) மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அனுமந்தன்(43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீஸார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்கள், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், நிகழ்விடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இவ்விபத்தால், தருமபுரி- சேலம் சாலையில், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!