பொய் வழக்கு போடும் காவல் துறையினர் அழிந்துவிடுவார்கள்: முன்னாள் அமைச்சர் கே.அன்பழகன்
தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தருமபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் திமுக அரசு சொத்து வரியை உயர்த்தி நாட்டுமக்களுக்கு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது. கழக ஆட்சியில் இதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 11 மாத காலம் ஆகிறது. அந்த வல்லுனர் குழு கூட்டப்பட்டதா? குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் அனைவரிடமும் கருத்து கேட்டு பதிவு செய்யப்பட்டதா? வல்லுநர் குழு பற்றி சிந்திக்காமல் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிய திமுக, அதை திரும்ப பெற வேண்டும். 150% மேலாக சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வணிகர்கள் கடை உரிமையாளர்கள் யாரும் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் கழக அரசு அதனை நிறுத்தி வைத்தது. இன்று உயிர்த்தி விட்டு மக்களை காப்பது போல் பாசாங்கு காட்டி கொண்டிருக்கிறது. மினி கிளினிக், தாலிக்கு தங்கம், மானியத்தில் இரு சக்கர வாகனம்,என கழக அரசால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு தடை செய்துள்ளது.
தேர்தல் நேரத்தில் சொத்து வரியை உயர்த்துவது இல்லை என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டுவிட்டு அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் திமுக அமைச்சரவையில் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள். மக்கள் பிரச்சினையை தீர்க்கின்ற வகையில் இந்த அரசு செயல்படவில்லை. அலியாளம் அணைக்கட்டிலிருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டு 11 மாத காலமாகிறது. திமுக அரசு அதைச் செயல்படுத்தவில்லை. நீர்ப்பாசன திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.
மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட டிப்ளமோ அக்ரிகல்ச்சர் டிப்ளமோ ஹார்டிகல்சர் அதை செயல்படுத்துவதற்கு வக்கில்லை. 400 கோடி ரூபாய் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பயன் பெறும் வகையில் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தவில்லை. ஒகேனக்கல் குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கழக அரசு ஜல்ஜீவன் திட்டம் மூலம் முன்மொழிந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. அதை செயல்படுத்த வழி நடத்துவதற்கு திமுகவிற்கு திராணியில்லை. தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. அதனை திமுக அவ்வேளை நடக்காமல் தடுக்கிறது.
கழக விவசாய பிரிவு தலைவர் டி .ஆர் அன்பழகன் மீது போலீசார் பொய் வழக்கு முதன்முதலாக போட்டனர். கழகத்தில் இளைஞர்கள் வேகமாக பணியாற்றுகிறார்கள் எனக் கருதி, அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்து விட்டார்கள் என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய் வழக்கு போலீஸார் போட்டுள்ளனர். காவல் துறை என்பது நாட்டு மக்களை காப்பதாகும். ஆனால் நாட்டு மக்களுக்கு எப்படி துரோகம் செய்கிறார்கள்.
மாரண்டஹள்ளியில் ஜெயராமன் என்ற கழக தொண்டரின் வீட்டில் காலையில் போலீசார் சோதனை செய்கிறார்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் மீது கஞ்சா வைத்திருந்தார் என பொய் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளது. திமுகவை சேர்ந்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வே அதிமுகவினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள். போலீசார் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். மனசாட்சியே இல்லாமல் அயோக்கியத்தனம் செய்தவர்கள் அழிந்து போய்விடுவார்கள். பொய் வழக்கு போடுவதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அழிந்து போய்விடுவார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையை தான் தர்மபுரி மாவட்ட காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காவல் துறை ஏவல் துறையாக இருக்கக்கூடாது. மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பேசினார்.
நிறைவாக திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் கே. சிங்காரம், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், கழக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளா்கள், நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பு நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu