தர்மபுரியில் தப்பியோடிய கைதியை மடக்கிப் பிடித்து போலீசார் அதிரடி

தர்மபுரியில் தப்பியோடிய கைதியை மடக்கிப் பிடித்து போலீசார் அதிரடி
X

தர்மபுரி மாவட்ட சிறைச்சாலை முன் தப்பித்த கார்த்திக்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தர்மபுரியில் தப்பியோடிய கைதியை மடக்கிப் பிடித்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உளி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத் மகன் கார்த்திக் என்கின்ற விஜி வயது 37. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரூபா 33. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திக் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், குஞ்சி பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரூபா சென்று விட்டார்.

இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற கார்த்திக், குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி ரூபாவை கழுத்து அறுத்து நேற்று முன்தினம் கொலை செய்தார். போலீசில் சரண் அடைந்த அவரை தளி போலீசார் கைது செய்தனர். பின்னர் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி நவம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தர்மபுரி மாவட்ட சிறைக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி தலைமை காவலர்கள் அசோகன், ராஜசேகர் ஆகியோர் அழைத்து சென்றனர்.

அப்போது தர்மபுரி மாவட்ட சிறைச்சாலையின் முன்பு இரவு 7 மணி அளவில் காரில் இருந்து இறங்கும்போது போலீஸ் ராஜசேகரரை தள்ளி விட்டு கை விலங்குடன் கார்த்திக் தப்பி ஓடினார். இதனையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, பெருமாள், அண்ணாதுரை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார் சிறைச்சாலை வளாகம், சிறை சாலை முன்பு, கிருஷ்ணகிரி-சேலம் பைபாஸ், ராயக்கோட்டை பைபாஸ், தடங்கம் பிரிட்ஜ்,சோகத்தூர் நான்கு ரோடு, தர்மபுரி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் சோகத்தூர் தொழுநோயாளிகள் வாழும் பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி, போலீசார் அசோகன், ராஜசேகர் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business