நிலுவை திருமண உதவித் தொகை விரைந்து வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள திருமண உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தருமபுரியில் தமிழக சமூக நலத்துறை கீதா ஜீவன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, தருமபுரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: தமிழகத்தில் பெண்கள் கல்வியில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக, 1989-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருமண நிதி உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கமும் சேர்த்து கடந்த ஆட்சியில் நடைமுறை படுத்தப்பட்டது. 4 கிராம் தங்கம் வழங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் 8 கிராமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், அதற்கான நிதி உதவி அளிக்கப்படவில்லை. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை. இவ்வாறு 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன. நிலுவை விண்ணப்பங்களின் மீது உடனடி நவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது திருமண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இளம் வயதில் திருமணங்கள் செய்வதால் பெண்களின் கல்வி, எதிர்காலம், உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளம்வயது திருமணங்களை தடுக்க அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து இளம் வயது திருமணங்களை தடுக்க திருமணம் செய்துகொள்வோர், அதில் பங்கேற்போர் என அனைவர் மீதும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் ஜூன் வரை 35 இளம் வயது திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் இடவசதியின்மை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு தொண்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், விரைந்து இந்த மையம், அரசு கட்டிடத்தில் இயங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நாகலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட, சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல, நல்லம்பள்ளி வட்டம் கோயிலூரில் தனியார் காப்பகத்தில் செயல்படும் தொட்டில் குழந்தை மையத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்