நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி நகராட்சி முதலிடம்
பைல் படம்.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடந்தது. தர்மபுரி நகராட்சி பகுதியில் 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 176 பேர் போட்டியிட்டனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகள் உள்ளன.
இவற்றில் பாலக்கோடு பேரூராட்சியில் 2 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 157 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 625 பேர் போட்டியிட்டனர். இதன்படி தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் உள்ள 190 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 801 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 1,75,530 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இந்த தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் வாக்குப்பதிவு அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடந்தது.
இதனிடையே நேற்று மாலை 5 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் 77.75 சதவீத வாக்குகள் பதிவானது. 10 பேரூராட்சிகளில் 77.68 சதவீத வாக்குகளும், தர்மபுரி நகராட்சியில் 77.91 சதவீதமும் வாக்குகள் பதிவானது. 5 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
தர்மபுரி நகராட்சியில் 23,720 ஆண் வாக்காளர்கள், 25,069 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 48,792 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 61,860 ஆண் வாக்காளர்கள், 64,866 பெண் வாக்காளர்கள், 12 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,26,738 பேர் உள்ளனர். தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் சேர்த்து மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,75,530 ஆகும்.
வாக்கு பதிவின் முடிவில் தர்மபுரி நகராட்சியில் 19,364 ஆண் வாக்காளர்களும், 20,337 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 39,703 பேர் வாக்களித்துள்ளனர். தர்மபுரி நகராட்சியில் மொத்த வாக்குப்பதிவு 81.37 சதவீதமாகும்.
இதேபோல் வாக்குப்பதிவின் முடிவில் மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 49,728 ஆண் வாக்காளர்களும், 51,844 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 10,1573 பேர் வாக்களித்துள்ளனர். 10 பேரூராட்சிகளில் மொத்த வாக்குப்பதிவு 80.14 சதவீதமாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி வாரியாக பதிவாகியுள்ள மொத்த வாக்குப்பதிவு சதவீதம் வருமாறு:-
அரூர்- 72.01, பாப்பிரெட்டிப்பட்டி-74.93, பி.மல்லாபுரம்-79.07, கம்பைநல்லூர்- 83.05, கடத்தூர்- 83.91, பென்னாகரம்-82.89, பாப்பாரப்பட்டி- 84.87, பாலக்கோடு-80.17, மாரண்டஅள்ளி-79.98, காரிமங்கலம்-88.09. வாக்குப்பதிவின் முடிவில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்த வாக்குப்பதிவு 80.49 சதவீதமாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 80.98 சதவீத ஆண் வாக்காளர்களும், 80.03 சதவீத பெண் வாக்காளர்களும், 20 சதவீத மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளில் அதிகபட்சமாக காரிமங்கலத்தில் 88.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu