தர்மபுரி மாவட்டத்தில் 380 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
தர்மபுரி நகராட்சி நாட்டான்மைபுரத்தில் கொரோனோ தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 4-வது கட்டமாக 380 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஊசி போட்டுக்கொண்டனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தர்மபுரி மாவட்டத்தில் மெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. தொடர்ந்து 4-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் இன்று 380 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம்கள் மாலை 7 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளர்கள் என மொத்தம் 3900 பேர் இந்த முகாம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அனைவரும் இந்த முகாமை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனிடையே தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட நாட்டான்மைபுரம், நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் என்பதை கணக்கிட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் சரஷ்குமார், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன், ரமண சரண், நாகராஜன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu