இலவச மின் இணைப்புக்கு ரூ.50,000 லஞ்சம்; விவசாயி தீக்குளிக்க முயற்சி

இலவச மின் இணைப்புக்கு ரூ.50,000 லஞ்சம்; விவசாயி தீக்குளிக்க முயற்சி
X

தீக்குளிக்க முயற்சிக்கும் விவசாயி பழனிசாமி.

தர்மபுரி அருகே இலவச மின் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவர், தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு மின்சார இணைப்பு பெற கடந்த 1997-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இது பதிவு மூப்பு அடிப்படையில், கடந்த 2010-ம் ஆண்டு மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மின்சாரம் வழங்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் பழனிசாமியை அலைக்கழித்துள்ளனர். பின்னர், ரூ. 50,000 லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு வழங்குவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி 50,000 லஞ்சமாக வழங்கி உள்ளார். ஆனால் மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார்.

ஆனால், தற்போது வரை ரூ.50,000 போதாது, மேலும் 50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் கொடுக்க தன்னிடம் வசதியில்லை என விவசாயி கூறுதல், மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் மீண்டும் காலதாமதம் செய்து வந்தனர்.

ஆனால் பழனிச்சாமிக்கு பின்னாடி மனு கொடுத்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு தண்ணீரில்லாமல் மிகுந்து சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பழனிசாமி, தனது மனைவி மலர்கொடியுடன் தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து, லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

பின்னர் அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து பழனிச்சாமியை பாதுகாப்பாக மீட்டு, அழைத்து சென்றனர். தொடர்ந்து இலவச மின்சாரம் வேண்டி, 24 ஆண்டுகளாக போராடியும் அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காத வேதனையில் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!