அரசு விழாவில் பூமி பூஜையா? தருமபுரி எம்.பி. ஆவேசம்

அரசு விழாவில் பூமி பூஜையா? தருமபுரி எம்.பி. ஆவேசம்

அரசு விழாவில் பூமி பூஜை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பி செந்தில்குமார்

அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று அதிகாரியை கண்டித்த தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் வீடியோ வைரலாகியுள்ளது

அரசு விழாக்களில் எந்த ஒரு அரசு கட்டிடங்களும் பாலங்களும் அமைக்கப்படும் போது முன்னதாக இந்து மத முறைப்படி பூமி பூஜை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. திமுக ஆட்சியிலும் கூட பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த பூஜையில் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் கூட பங்கேற்று இருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி. அங்கே மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்க இருந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் அழைக்கப்பட்டு இருந்தார். இதை அடுத்து அந்த நிகழ்ச்சிக்கு எம் பி செந்தில்குமார் சென்றிருக்கிறார்.

அங்கே பணியை தொடங்குவதற்கு முன்பாக இந்து மத முறைப்படி பூமி பூஜை நடந்து இருக்கிறது. இதை பார்த்து கொதித்து எழுந்த செந்தில்குமார் எம்பி, இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடம் கிடையாது. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா? இல்லை தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா ? என்று அந்த அதிகாரி மீது பாய அதிகாரி எதுவும் சொல்ல முடியாமல் நின்றார்.


"அப்படி பூஜை செய்துதான் நடத்த வேண்டும் என்றால் இந்து மதத்தினரை மட்டும் வச்சு ஏன் நடத்துகிறீர்கள்? முஸ்லீமை கூப்பிடுங்கள், கிறிஸ்தவர்களை கூப்பிடுங்கள். கடவுளே இல்லை என்று சொல்லும் திராவிடர்களையும் கூப்பிடுங்கள். எல்லாரையும் அழைத்து இதை செய்யுங்கள்" என கோபமாக கூறினார்

உடனே குறுக்கிட்ட அந்த அதிகாரி, "அமைச்சரே பூமி பூஜை செய்யச் சொன்னார்" என்று அந்த அதிகாரி சொல்ல, ''எந்த அமைச்சர் எந்த அமைச்சர்'' என்று அதிகாரி மீது செந்தில்குமார் ஆவேசம் காட்ட, அந்த அதிகாரி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றார்.


இது திராவிட மாடலா ஆட்சி? இது போன்ற நிகழ்வு நிகழ்ச்சிகள் இனிமேல் நடத்தக் கூடாது. அரசு விழாவில் அப்படி நடத்த வேண்டும் என்றால் அனைத்து மதத்தினரையும் அழைத்து பூஜை செய்யுங்கள் . ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு கறாராக உடனே அங்கிருந்து பூஜையை பாதியிடம் நிறுத்திவிட்டு அங்கு எந்த பூஜை பொருட்கள் எடுத்துக் கொண்டு அர்ச்சகரை அங்கிருந்து வெளியேறச் சொல்லி உத்தரவிட்டார்.

இதை அடுத்து பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் அங்கிருந்து வெளியேறினார் . அதன் பின்னர் எந்தவித பூஜையும் செய்யாமல் ஏரி சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார் செந்தில்குமார் எம்பி. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story