தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனி பொழிவு

தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனி பொழிவு
X
இன்று அதிகாலை முதல் தர்மபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் தொடங்கி மாசி மாதம் வரை 4 மாதங்கள் வரை பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது ஐப்பசி மாதம் பிறந்துள்ள சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் தர்மபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு காணப்பட்டது.

கடந்த வாரம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் நல்ல வெயில் அடித்து வந்தது. தொடர்ந்து பெய்த மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது.

இன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகரப்பகுதிகள், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு இருந்தது அதிகாலை இருந்து காலை 8.30 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது.

இதேபோன்று தொப்பூர் பகுதியான பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபனியால் முன்னால் செல்லும் ஆட்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது.

அதியமான்கோட்டை, தொப்பூர் நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் தொடங்கியது போலவே காலை 8மணியை கடந்தும் பனி மூட்டம் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.

இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.

மேலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏற்படும் பனிப்பொழிவின் அளவிற்கு மூடுபனி ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி சீதோசன நிலையானது ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு உள்ளிட்ட மலை பிரேதச பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவை போல காணப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil