பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
X

பைல் படம்.

Crop Insurance -வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்தப் பணிகளில் ஒன்றான பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தர்மபுரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Crop Insurance -2022- 23 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்தப் பணிகளில் ஒன்றான பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தர்மபுரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2022 – 2023 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு - செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழைக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களுடன் 27.09.2022 அன்று மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் சுமார் 40 இலட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு காப்பீடு செய்யவும், சுமார் 26 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டு அதற்குண்டான நடவடிக்கைகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது எனவும் இதனால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் நெல் பயிர்க்கு சம்பா பருவத்திலும், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, கரும்பு மற்றும் இராகி மற்றும் பயிர்கள் குளிர் காலப்பருவத்திலும் (ராபி) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா மற்றும் குளிர் கால பருவ நெற்பயிருக்கு வரும் 15.11.2022 தேதி வரை மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, இராகி பயிருக்கு 31.12.2022 வரை, கரும்பு பயிருக்கு 31.03.2023 வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நிலக்கடலை பயிருக்கு ரூ.309.75, பருத்தி பயிருக்கு ரூ.593.24, கரும்பு பயிருக்கு ரூ.2600 மற்றும் இராகி பயிருக்கு ரூ.153.75, நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.547.50, மக்காக்சோளம் பயிருக்கு ரூ.353.40 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள "விவசாயிகள் கார்னரில்" நேரிடையாக காப்பீடு செய்யலாம். முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ - அடங்கல் /விதைப்பு அறிக்கை , வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்படி பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுகவும் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!