போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்
தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தர்மபுரியில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் உள்பட 3 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உற்சாகமாக ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இளங்கோவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக ரூ.4000, 3-ம் பரிசாக ரூ.3000, மற்றும் கேடயம், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அதேபோல் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1000, 20 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.500 என சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu