குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா

குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா
X
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெற்றது

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜையும், ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேகப் பொருட்கள் வரிசை அழைப்பும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான இன்று காலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் மற்றும் புஷ்பாஞ்சலி சேவையும் நடைபெற்றது. பின்னர் கோவில் பந்தலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு 2 டன் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று இரவு திருவாபரண அலங்கார காட்சியுடன் அம்மையப்பன் திருநடன உலா மற்றும் கோபுர தரிசனம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனித்திருமஞ்சன விழா குழு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!