தர்மபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள் விற்பனை
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையல் இட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளுடன் செய்யப்பட்ட உணவை குடும்பத்துடன் உண்டு விரதத்தை முடித்துக் கொள்வார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம்.
தர்மபுரி உழவர் சந்தையில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் உழவு சந்தைக்கு வரத் தொடங்கினர். ஒரே நாளில் மட்டும் மொத்தம் 39 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் விற்பனையானது இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 76 ஆயிரம் ஆகும்.
தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 142 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 59 வகையான காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 9000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர்.
வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். புரட்டாசி 4-வது சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.
தர்மபுரி உழவர் சந்தை அமைந்துள்ள கிருஷ்ணகிரி சாலையில் அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu