தருமபுரி மாவட்டத்தில் நாளை 38 வது மெகா தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் நாளை 38 வது மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை 38 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நாளை 38 வது மெகா தடுப்பூசி முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுபடுத்திட கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தருமபுரி மாவட்டத்திலும் கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்துவதை இலக்காக கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1928 சிறப்பு முகாம்களில் வருகின்ற 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 38 வது 'மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 21.09.2022 வரை நடைபெற்ற முகாம்கள் மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 12 வயதுக்கு மேல் உள்ள 11.99 இலட்சம் நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 10.80 இலட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியும், மற்றும் 158002 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2022-ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், இதர அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு சுகாதார மையங்களுக்கு சென்று தவறாமல் "பூஸ்டர் டோஸ் தடுப்பூசி" -யினை இலவசமாக செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிமுறையின்படி ரூ.500/- அபராதம் வசூலிக்கப்படும். அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்திட வேண்டும்.

மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் கோவிட் அறிகுறி தென்பட்டால் அவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் RTPCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்து கொள்பவர்கள், அப்பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும், தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1928 சிறப்பு முகாம்களில் வருகின்ற 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை நடைபெற உள்ள கொரோனா"மெகா தடுப்பூசி முகாமினை" பயன்படுத்திக்கொண்டு தகுதி உடைய அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!