டி.ஜி.பி சைலேந்திரபாபு: மாணவர்களுக்கு ரோல் மாடல்; ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனம்
டி.ஜி.பி சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார்
டி.ஜி.பி சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25 ஆவது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1987ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர். சைபர்கிரைம் ஆய்வுப்படிப்பையும் முடித்துள்ளார்.
எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை அடையாறு துணை ஆணையர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தார்.
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்துள்ளார். மேலும், சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய போது 2004ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரௌடி மாமூலில் கொடி கட்டிப்பறந்த தாதாக்கள் ‘காட்டான்’ சுப்பிரமணி, ‘கேட்’ ராஜேந்திரன், ‘பூங்காவனம்’ ராமமூர்த்தி, ‘மாட்டு’ சேகர், ‘டைசன்’ சேகர், ‘பாக்சர்’ வடிவேல், வீரமணி போன்ற ரௌடிகளின் கதைக்கு முடிவு கட்டினார்.
தற்போது சென்னையில் பெரிய ரௌடிகள் அந்த அளவுக்கு இல்லை என்றால் அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சல் நடவடிக்கைகள் தான் காரணம் என காவல்துறையினரே கூறுகின்றனர். வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக இருந்து முத்திரை பதித்தவர்.
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றிய போது, பள்ளிச் சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார். அதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அவரை தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுதலைப் பெற்றது.
2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல்போல சூழ்ந்து கொண்டது. உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் வெள்ளக்களத்தில் குதித்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டது இன்னும் பாராட்டப்படுகிறது.
3 ஆண்டுகள் அவர் தலைமையில் செயல்பட்டதால் கடலோர பாதுகாப்பு குழுமம் இதுவரை பெறாத புதிய பலம் பெற்றது. தமிழகம் முழுவதும் கூடுதலாக கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் மீனவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தை மேலும் பலப்படுத்தினார். அந்நிய நாட்டினர் தமிழக கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாதபடி தமிழக கடல் எல்லைகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட்டது.
பணத்துக்கு ஆசைப்பட்டு கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சோக சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கள்ளத்தோணி ஆசாமிகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சைலேந்திரபாபு, அவ்வாறு செல்பவர்களை அழைத்து விழிப்புணர்வு அளித்தார். இதனால் கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவிற்கு தற்போது செல்வது குறைந்துள்ளது.
அதனையடுத்து, சைலேந்திரபாபு சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அந்த திட்டம் அமைந்தது.
14 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் கைதிகள் வெளியே சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று திகைத்து நிற்காமல் ஓட்டுநர் தொழில் செய்து அவர்கள் தங்கள் வருமானத்தை தேடிக் கொள்ள இது ஏதுவாக அமைந்தது. மேலும் நன்னடத்தையுடன் உள்ள கைதிகள் 700க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
பின்பு அவர் டிஜிபியாக பதவி உயர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, ரயில்வே காவல்துறை டிஜிபியாக பதவியில் இருந்தார். அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு தமிழகத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக "கஞ்சா வேட்டை", பிச்சைக்காரர்களை மீட்கும் "ஆபரேஷன் மறுவாழ்வு", ரௌடிகளை ஒழிக்க "மின்னல் ரௌடி வேட்டை", "ஆபரேஷன் கந்துவட்டி", "போலி மருத்துவர் கண்டறியும் நடவடிக்கை", காணாமல் போன குழந்தைகளை கண்டறிய "குழந்தைகள் மீட்பு ஆப்ரேஷன்" போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இவரது பதவி காலத்தில் பிரபல கொள்ளையன் நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சிக்கு என இரு முறை பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்த போது சிறப்பாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டதாக அனைவராலும் பாராட்டு கிடைத்தது. மேலும் தென்னிந்தியாவில் முதன்முறையாக ஜனாதிபதியின்குடியரசுத்தலைவரின் சிறப்பு தனிக்கொடி தமிழக காவல்துறைக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலவரம், கோவை குண்டுவெடிப்பு, பிஎப் ஐ அமைப்பு என்.ஐ.ஏ சோதனை, வட மாநில தொழிலாளர் பிரச்சனை, அதிமுக கலவரம், கள்ளச்சாராயம் மரணம், நிதி நிறுவன மோசடி போன்ற சம்பவங்களில் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.
36 ஆண்டுகால காவல்துறை அனுபவத்தில் சைலேந்திரபாபு பல அரிய சாதனைகளை நிகழ்த்திய அவரது கடமை உணர்வை பாராட்டி குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப்பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கமும் பெற்றுள்ளார்.
சைலேந்திரபாபு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுவதில் தீராக்காதல் கொண்டவர். நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுடன் சிறப்பு உரையாற்றியுள்ளார். அதனால் பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரோல் மாடாலாக திகழ்ந்து வருகிறார்
அதேபோல மராத்தான் ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டவர் சைலேந்திரபாபு. தமிழகம் முழுக்க சைக்கிள் பயணங்களை இவர் தனது குழுக்களுடன் மேற்கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களையே உருவாக்கி வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக சைபர் குற்ற விழிப்புணர்வு, சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு, மன வள ஆலோசனை, உடற்பயிற்சி டிப்ஸ், இயற்கை உணவு, போன்றவற்றை வீடியோவாக பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை தனது வாடிக்கையாக கொண்டு வருகிறார்.
இப்படி பல்வேறு சாதனைகளையும், மக்களின் பாராட்டுகளை பெற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்றுடன் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu