மஹா சிவராத்திரி: அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி
பைல் படம்.
திருவண்ணாமலை:அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மகா சிவராத்திரி விழா நடக்க உள்ளது. மாசி மாதம், அமாவாசைக்கு முன் வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும், அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த நாள் மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாளை, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலையில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அதிகாலை, 5:00 முதல் மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கும். இரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூலகருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கும். இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில், நாளை இரவு பன்னிருதிருமுறை இசைக்கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சி, பரத நாட்டியம், சொற்பொழிவு என, பல்வேறு நிகழ்வு நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் லிங்கோத்பவர் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் பங்கேற்பதற்கு கட்டளைதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் முழுவதும் சிவராத்திரியன்று இரவு லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறும்.
இதை காண்பதற்காகவே பல பக்தர்கள் வருகை தருவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்ச தீபம் ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது இந்த ஆண்டும் லட்ச தீபத்திற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது மேலும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் சிவனை தரிசிக்க பக்தர்கள் பல மாவட்டங்களிலிருந்தும் வருகை தருவர். மேலும் அன்று கிரிவலம் வருதல் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதிகளிலும், அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அண்ணாமலை திருக்கோயிலிலும் மிக அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவர். எனவே கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் ஆதி அண்ணாமலை திருக்கோவில் கிரிவலப்பாதை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu