விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
X
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட எழுத்தர் சிவகுமார் வேனில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டார்.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு.வி.க.நகரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் அருண் தாமரை. அருண் தாமரையின் தந்தை பழனி கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இறந்த பழனிக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்குள் சொத்து சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அருண் தாமரை நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தேவைப்படும் சிட்டா, அடங்கல் நகல் எடுப்பதற்காக விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஆவண பாதுகாப்பு அறையில் பணிபுரியும் பதிவறை எழுத்தர் சிவகுமார் என்பவரை அணுகி உள்ளார். அதற்கு சிவகுமார் தனக்கு ரூ 1,500 லஞ்சம் கொடுத்தால் தான் சிட்டா, அடங்கல் தருவதாக கூறி உள்ளார். பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறி விட்டு அருண் தாமரை சென்று விட்டார்.


லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண் தாமரை இதுபற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் மாலா,சண்முகம், திருவேங்கடம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று விருத்தாசலம் தாலுகா அலுவலகம் வளாகத்தில் மறைந்து இருந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி அருண் தாமரை சிவகுமாரிடம் ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சிவகுமாரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!