விருத்தாசலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி
விருத்தாசலத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் பகுதியில் உள்ள டிரைவர் குவார்ட்டர்ஸ் சாய்பாபா கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் ரவி கொத்தனார். இவரது மனைவி ஜெயா(45) என்பவர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் பிரதமர் மோடி திட்டத்தில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்டி வசிக்கிறார்.
இந்நிலையில் வீட்டின் பின்புறம் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் தனது வழிபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதாகவும் ஜெயா வீட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியை இடித்து வழி ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் நீதிமன்ற உத்தரவின்படி விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட குழுவினர் ஜே.சி.பி. இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பு பகுதியை இடிப்பதாக கூறி வந்தனர்,
தகவலறிந்த ஜெயா,அவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளோம் என்பதால் வீட்டை இடிக்க அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவிலை.
அப்போது திடீர் என ஜெயா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன்,உதவி ஆய்வாளர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu