என்.எல்.சி., சுரங்க நீர் மூலம் குடிநீர் திட்டப் பணி தீவிரம்
நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றும் தண்ணீரை, இரும்புக் குழாய்கள் மூலம் கீழ்வளையமாதேவி கிராமத்தில் அமைய உள்ள 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு அதி நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படும்.
அந்த தண்ணீரை 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் சேகரித்து, மின் மோட்டார்கள் மூலம் புதுக்கூரைப்பேட்டை, கொத்தட்டை, கொட்டாரம், ஆவட்டி ஆகிய இடங்களில் 4 பூஸ்டர் நீர் சேகரிப்பு தொட்டிகள், பல்வேறு பொது நீர் சேகரிப்பு தொட்டிகள், ஊராட்சி அளவிலான நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும். அங்கிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 789 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
இத்திட்டம் மூலம் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலுார், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகளில் தினமும் சராசரியாக ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். மேலும் இத்திட்டம் மூலம் விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 625 கிராமங்களுக்கு நாளொன்றுக்கு கூடுதலாக 20 லிட்டர் சேர்த்து 55 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் தற்போது பணிகள் துவக்கப்பட்டு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இத்திட்டம் 2022 ஆகஸ்ட் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் குறிஞ்சிப்பாடி, வடலுார், கங்கைகொண்டான், பெண்ணாடம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை ஆகிய 6 பேரூராட்சிகள், விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 625 ஊராட்சி பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu