சோழர் காலத்து பேசும் பெருமாள் கோவிலை மீட்டெடுக்க கிராம மக்கள் கோரிக்கை

சோழர் காலத்து பேசும் பெருமாள் கோவிலை மீட்டெடுக்க கிராம மக்கள் கோரிக்கை
X

வானமாதேவி கிராமத்தில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான, சோழர்கால பேசும் பெருமாள் கோவில் 

1200 ஆண்டுகள் பழமையான, சேதமடைந்த சோழர்கால பேசும் பெருமாள் கோவிலை மீட்டெடுக்க வானமாதேவி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் சோழத்தரம் அருகே உள்ளது வானமாதேவி கிராமம். இக்கிராமத்தில் வீராணம் ஏரிக்கரையோரம் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால பேசும் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகள் முன்பு வரை எப்போதாவது ஒருநாள் பூஜைகள் நடைபெற்ற வந்த கோவில், தற்போத மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது. இக்கோவில் இன்று மிகவும் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து அச்சமூட்டும் விதத்தில் இருந்து வருகிறது.

இக்கோவில் குறித்து வானமாதேவி கிராம மக்கள் தெரிவிக்கும்போது கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன்பு வீராணம் ஏரி உருவாக்கம் செய்யப்பட்டபோது சோழர்கள் வழிபடுவதற்கு இந்த பேசும்பெருமாள் கோவில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான பேசும்பெருமாளை வணங்கிய பின்னரே அவர்கள் வீராணம் ஏரி உருவாக்கியதாக கூறப்படுகிறது.

கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட இக்கோவிலில், அந்தக்காலத்தில் பல்வேறு விழாக்கள் நடத்தி தங்களது கலாச்சார பண்பாட்டை சோழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட பெருமைமிக்க கோவிலின் கட்டிடம் தற்போது உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவிலின் மேல்பாகத்தில் மரங்கள் முளைத்து கோவிலின் அடையாளத்தையே மறைத்துக்கொண்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள நந்தி சிலை, யானை சிலை, மற்றும் குதிரை சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் சேதமடைந்து, உடைந்து விழுந்தும் காண்பதற்கே வேதனையளிக்கும்படி இருக்கிறது.

ஒருகாலத்தில் மனிதர்களால் சூழப்பட்டு விழாக்கள் எடுக்கப்பட்ட இக்கோவில் தற்போது புதர்களாலும், முட்செடிகளாலும், அச்சமளிக்கும் விதத்தில் இருக்கிறது. இக்கோவிலுக்கு பல்வேறு கிராமங்கள்,தேசங்கள் தாண்டியும் இப்போதும் பக்தர்கள் இருந்து வருகிறார்கள். வரலாற்று பொக்கிஷமாக இருக்கும் சேதமடைந்துள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். மேலும் கோவிலுக்கு என்று இருக்கிற 100 ஏக்கருக்குமேல் உள்ள நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தை பாதுகாத்து இந்த கோவிலை பராமரிக்கவேண்டும். முக்கியமாக கோவிலுக்கு என உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் மீட்டெடுக்கவேண்டும் என வானமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி பாலகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன் உள்பட கிராம மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!