விஜயதசமியையொட்டி கடலூர் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம்
கடலூர் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றதாகும். இக்கோவில் கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது .
இந்த நிலையில் இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும் இதே விஜயதசமி அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள் .
அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற குதிரை முகம் கொண்ட லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
பின்னர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்து அந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். குழந்தைகளும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu