இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
கடலூர் கலெக்டர் கி. பாலசுப்ரமணியம்
கடலூர் கலெக்டர் கி. பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 நகராட்சிகள், அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை, வடலூர்,குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம், புவனகிரி, கங்கைகொண்டான், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், மற்றும் சேத்தியாதோப்பு ஆகிய பேரூராட்சி பகுதிகளில் வசித்து வரும் ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்புப் பயிற்சி அளித்து வேலை தரும் தகுதியுடைய பயிற்சி நிறுவனங்களில் இருந்து TNULM -EST&P பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நற்பெயருடன் விளங்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் .
பயிற்சி நிறுவனங்கள் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் பயிற்சிக்கான தகுதி உடைய ஆசிரியர்களையும் பயிற்சி கூறிய தளவாடங்கள், எந்திரங்கள், மென்பொருட்கள் போன்றவை அனைத்தையும் கொண்டு பயிற்சி நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு முழு தகுதி உடையதாக இருக்க வேண்டும்.
3 ஆண்டுக்கு மேல் திறன் பயிற்சி அளித்த நிறுவனங்களாக இருத்தல் வேண்டும், SKILL INDIA PORTAL-லில் TRAINING PROVIDER அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும், மேலும் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி மையங்கள் நகர்ப்புற பகுதிகளை ஒட்டி செயல்படுவதாக இருக்க வேண்டும்.
பயிற்சிக்கான பாடத்திட்டம் எஸ்எஸ்சி ஒப்புதல் அளித்த பாடத்திட்டத்தை பின்பற்றவேண்டும், பயிற்சி முடித்ததும் இளைஞர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மதிப்பீடு செய்து எஸ்எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நேரங்களுக்கு குறைவின்றி குறைந்த பட்சம் 3 மாதங்களாவது முழுநேர பயிற்சியாக (400 + 30 மணி நேரங்கள்) அளிக்கப்படவேண்டும்.
பயிற்சி முடித்த இளைஞர்களில் 70 சதவிகிதத்துக்கு குறைவின்றி மாதம் 8000க்கும் குறையாத ஊதியத்துடன் வேலை வாய்ப்பு பெற்று தந்து அவர்களின் பணியை 6 மாத காலம் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசு திட்டங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்திருக்க வேண்டும்,
பி எம் கே கே பயிற்சி மையத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மேற்கண்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu