உதயச்சந்திரனுக்கு நெருக்கடி: என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

உதயச்சந்திரனுக்கு நெருக்கடி: என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?
X

உதயசந்திரன் மற்றும் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரின் முதன்மை தனிச்செயலாளர் உதயச்சந்திரன் விஷயத்தில் முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

அரசு இயந்திரம் செயல்பட முக்கியக் காரணமாக இருப்பவர்கள் அரசு அதிகாரிகள். திமுக அரசு மீது பெரிய அளவிலான விமர்சனங்கள் எதுவும் இல்லாததற்கு ஸ்டாலின் மட்டுமே காரணம் அல்ல. அவரது உத்தரவுக்கு ஏற்ற வகையில், அதனை செயல்படுத்தும் அதிகாரிகளின் பங்கும் முக்கியமானது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், அவர் அறிவித்த பல்வேறு அதிகாரிகள் நியமனம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு, முதல்வரின் முதன்மை தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் முதன்மை தனிச் செயலாளர் உதயசந்திரனை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தினர், உதயச்சந்திரனை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்துள்ளதால், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன், பதவியில் தொடர விருப்பமில்லை என உதயச்சந்திரனே தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுவது கூடுதல் தகவல்.

அண்மைக்காலமாகவே உதயச்சந்திரன் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகமாக இருப்பதாகவும், அமைச்சர்களின் செயல்பாடுகளில் அவர் தலையிடுவதாகவும் கோட்டை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் அவரது ஆலோசனைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் செயலாளர்கள் இருப்பர். முதல்வரின் கீழ் உள்ள தனிச் செயலாளார்களுக்கு அந்த துறைகளை பிரித்துக் கொடுப்பது மரபாக இருக்கிறது. துறைகளின் செயலாளர்கள் அந்தந்த தனிச் செயலாளர்களிடம் ஆலோசித்து செயல்படுவர். அதன்படி, உதயச்சந்திரனிடம் முக்கியத்துறைகள் உள்ளன. மற்ற தனிச்செயலர்களிடமும் சில துறைகள் உள்ளன. ஆனாலும், அனைத்து துறையின் செயலாளர்களும் முதல்வரை ஒன் டூ ஒன் எந்தநேரமும் சந்திக்கும் உதயச்சந்திரனிடமே பெரும்பாலும் ஆலோசிப்பதால், அவர் மீது பலரும் காட்டமாக இருக்கின்றனர். எனவே, பல்வேறு அதிகார மட்டங்களில் இருந்தும் அவர் மீது புகார்கள் வாசிக்கப்படுகின்றன" என்கிறார்கள்.

முற்போக்குவாதி, சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் என்பன உள்ளிட்ட பல்வேறு முகங்கள் உதயச்சந்திரனுக்கு பொதுவில் இருந்தாலும், அதிகாரமட்டத்தில் அதிகாரத்துக்கான முகமும் அவரிடம் இருப்பதாக சுட்டிக்காட்டும் அவர்கள், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு உதயச்சந்திரன் நெருக்கமாக இருப்பதாலும், முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாலும், முதல்வர் அவருக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதாலும், அவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை இறையன்பு, உதயச்சந்திரன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்காமல் பெரும்பாலும் எந்த விஷயத்தையும், திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை. ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பும் உள்ளது. பொதுமக்களிடம் ஸ்டாலினின் இந்த இமேஜுக்கான முக்கிய காரணத்துக்கு இவர்கள் இருவரது பங்கும் முக்கியமானது. எனவே, உதயச்சந்திரனை நீக்கினால், அவரது அந்த இமேஜ் சற்று குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், "திமுகவுக்கு ஆரம்பம் முதலே பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. அரசு மீது மட்டுமல்ல அதிகாரிகள் மீதும் நாங்கள் கண் வைத்திருக்கிறோம் என ஓப்பனாகவே அக்கட்சியினர் பேசி வருகின்றனர். அவர்களது தற்போதைய டார்கெட்டாக உட்ச பதவியில் இருக்கும் இருவர் உள்ளனர். அவர்களின் ஒருவர் உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றொருவர் உதயச்சந்திரன். டேவிட்சன் ஆசீர்வாதம் மீதான அண்ணாமலையின் புகாரில் இருந்து அதனை அறிந்து கொள்ளலாம். ஆனால், உதயச்சந்திரன் க்ளீன் சிட் என்று பெயரெடுத்தவர். எனவே, தங்களது சித்தாந்தத்துக்கு எதிராக இருப்பவரும், மக்கள் நலத்திட்டங்கள் மூலமாக ஸ்டாலினுக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தருபவருமான உதயச்சந்திரனை வேறு விதத்தில்தான் கையாள வேண்டும் என்பதால், இதுபோன்ற யுக்திகளை கையாண்டு உதயச்சந்திரனின் பிம்பத்தை உடைத்து அவரை தூக்கியெறிய பாஜக முயற்சிக்கிறது." என்று கூறுகிறார்கள்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை ஏன் மாற்றக் கூடாது?

உதயச்சந்திரனை பொறுத்தவரை வெகுஜன மக்களின் இதயத்தில் வெகு சீக்கிரத்திலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டவர். தான் வகித்த துறைகளில் செய்த சீர்திருத்தங்களின் காரணமாக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். கல்வித்துறையில் நவீன புரட்சியை ஏற்படுத்தியவர். பள்ளிக் கல்வித்துறையில் உதயசந்திரன் பணியாற்றிய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம், மாவட்ட அளவில் முதலிடம் என்று வெளிப்படையாக மதிப்பெண்கள் அறிவிக்கும் சிஸ்டத்தை உடைத்தவர். எம்சிஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக பல வண்ணங்களில் தமிழக மாணவர்கள் தரமான கல்வி பயில வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறார், மதுரையில் பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த 3 கிராமங்களுக்கு தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்.

டிஎன்பிஎஸ்சி துறையின் அத்தனை அம்சங்களையும் டிஜிட்டலில் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் அரசு வேலைக் கனவை உறுதிப்படுத்தியவர். தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் தமிழரின் ஆணிவேரான கீழடியின் பெருமைகளை ஆவணப்படுத்தியதும் இவரின் அரும்பணிதான். இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸை மாற்றக் கூடாது என்பதுதான் பலரது கோரிக்கையாக இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் அதனை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு பேசித்தீர்க்க வேண்டுமே தவிர உதயச்சந்திரனை மாற்றும் யோசனை சரியாக இருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!