சேவை குறைபாட்டிற்காக அஞ்சலக அதிகாரிகள் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

சேவை குறைபாட்டிற்காக அஞ்சலக அதிகாரிகள் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
X
சேவை குறைபாட்டிற்காக திருச்சி அஞ்சலக அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி பீம நகர் நியூ ராஜா காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரி பாஸ்கர். இவர் தனது மகள் கனிஷ்காவை திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ப்பதற்காக கடந்த 21-4- 2015 அன்று தபால் மூலம் விண்ணப்ப மனு அனுப்பினார். இதற்காக விண்ணப்ப கட்டணம் ரூ.100 மற்றும் தபால் வில்லை ரூ.10 க்கு ஒட்டி அனுப்பினார்.

இந்த கடிதம் மேற்படி பள்ளியில் கிடைக்கப் பெற்று அவர்கள் 27-4- 2015 அன்று ஹரிபாஸ்கர் மகளை பள்ளியில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதற்கான கடிதத்தை அனுப்பினர்.அதில் 4 -5 -2015 மற்றும் 5-5 -2015 ஆகிய தேதிகளில் பள்ளியில் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிட்டு தபால் அனுப்பினர். இந்த தபால் வழக்கறிஞர் ஹரி பாஸ்கருக்கு உடனடியாக வந்து கிடைக்கவில்லை. மிகவும் தாமதமாக 22 -5 -2015 அன்று தான் தபால்காரர் அவருக்கு பட்டுவாடா செய்துள்ளார்.

இந்த தபாலை எடுத்துக்கொண்டு ஹரிபாஸ்கர் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளிக்கு சென்ற போது உரிய காலத்தில் தாங்கள் வராததால் உங்களது மகளுக்கு அட்மிஷன் தர முடியாது எனக்கூறி மறுத்துவிட்டனர். இதனால் வழக்கறிஞர் ஹரி பாஸ்கர் தனது மகள் கனிஷ்காவை அந்த பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த ஹரி பாஸ்கர் திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12 -ன் கீழ் தனது வழக்கறிஞர் மணிகண்டன் மூலம் நீதி கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில் விண்ணப்ப கட்டணமாக தான் செலுத்திய ரூ.100 தபால் வில்லை ரூ. 10 மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 95 ஆயிரம் இழப்பீடு,தவிர வழக்கு செலவையும் தருவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி திருச்சி அஞ்சலக கண்காணிப்பாளர், அஞ்சல் அதிகாரி மற்றும் பீமநகர் பிரிவு தபால்காரர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காந்தி உறுப்பினர்கள் ஜே.எஸ்.செந்தில்குமார், ஆர். சாயீஸ்வரி ஆகியோர் அடங்கிய மன்றம் விசாரித்து தீர்ப்பளித்தது.

அதில் தபால் துறையின் சேவை குறைபாட்டினால் வழக்கறிஞர் ஹரி பாஸ்கர் தனது மகளை அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பள்ளிக்கு அனுப்பிய விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ,தபால் வில்லை ரூ.10 மற்றும் அவரது மன உளைச்சலுக்காக ரூ.10 ஆயிரம் இழப்பீடு மற்றும் புகார் வழக்கு செலவு ஆகியவற்றை தீர்ப்பு கூறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் எதிர் மனுதாரர்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்கள்.

Tags

Next Story