பணி நியமனம் வழங்கியதில் 12 கோடிக்கு மேல் ஊழல் புகார்: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தே முதல்வர் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின். தற்போது அதற்கான பணிகளிலும் இறங்கி உள்ளார். தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை நிறுத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், தற்போதைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட தி.மு.கவினர் ஸ்டாலினுக்கு மனுக்கள் அனுப்பி வருகின்றனர்.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தம்பி ஓ.ராஜாவுக்கு பதவி வழங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் மதுரை மாவட்டத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிக்கப்பட்டது. பிரிவினை அவசரமாக நடைபெற்றாலும், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் 40 சதவீத சொத்துக்கள் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது.
ஒன்றியம் தொடங்கப்பட்டது முதல் ஊழல் நடைபெறாத இடமே இல்லை என்கிற அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என தேனி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர். குறிப்பாக பல கோடி சொத்துக்களுடன் பிரிக்கப்பட்ட தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம், தற்போது பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் துணை மேலாளர் முதல் சாதாரண கிளர்க் வரை 38 பணியிடங்கள் நியமிக்கப்பட்டன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் 40 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு நியமனம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நியமனத்திற்கு விண்ணப்பிக்க கூட்டுறவு ஒன்றியத்தின் வெப்சைட் வேலை செய்யவே இல்லை. பணம் கொடுத்தவர்களிடம் மட்டும் விண்ணப்பங்களை வாங்கிக் கொண்டனர் என்று குற்றச்சாட்டுகள் அதிகம் வந்தது.
ஏதாவது மூன்று பல்கலைகழகங்களை தேர்வு செய்து, அதில் ஒரு பல்கலைகழகத்திடம் விண்ணப்பித்தவர்களிடம் எழுத்து தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கும்பொறுப்பினை கொடுக்கவேண்டும். ஆனால் அந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கு முதல்நாளே கேள்வித்தாள் சென்று சேர்ந்து விட்டது என்றும், இதனை செய்தது யார் என தெரியவில்லை என்றும் குற்றம் சாற்றியுள்ளார்கள்.
அதேபோல் மதிப்பெண் நியமனம், நேர்முகதேர்வு நடத்துவது, பணி நியமன ஆணைகளை வழங்குவது உட்பட எந்த ஒரு நடைமுறைக்கும் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது.
இந்த பணி நியமனத்தில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடந்துள்ளன என்கின்றனர். பாவம் கூட்டுறவு இயக்குனர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது. தங்களுக்கு தேவையான அதிகாரிகளை நியமனம் செய்து, பணி நியமனத்தை முடித்து பணம் சம்பாதித்து விட்டனர். தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றனர். ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் தற்போது ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை விலை குறைத்து விட்டனர். இப்படி விலையினை குறைத்துக்காட்டும் வகையில் கொழுப்பு சத்து பார்க்கும் எந்திரத்தை செட் செய்து வைத்து விட்டனர். இதில் தினமும் பல லட்சம் முறைகேடு நடக்கிறது.
இவ்வளவு பால் கொள்முதல் செய்தாலும், விற்பனை என்னவோ 3 ஆயிரம் லிட்டர் மட்டும் தான். பால் விற்பனையினை அதிகரிக்கவோ, கூட்டுறவு ஒன்றியத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஒன்றியத்தில் நடைபெற்ற முறைகேடுகளை துல்லியமாக எழுதி முதல்வருக்கு அனுப்பி உள்ளோம். முதல்வர் சாட்டையை சுழற்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்' என்று திமுகவினர் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu