ஒப்பந்தத் தொழிலாளர்கள் படிப்படியாக பணிநிரந்தரம்: அமைச்சர் காந்தி தகவல்

ஒப்பந்தத் தொழிலாளர்கள் படிப்படியாக பணிநிரந்தரம்: அமைச்சர் காந்தி தகவல்
X

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடைக்கான காசோலையினை வழங்கினார்.

அறந்தாங்கியில் உள்ள கூட்டுறவு நூற்பாலையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி (19.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடைக்கான காசோலையினை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கினை எய்திட மாநிலத்தின் ஜவுளித்துறையின் பங்களிப்பினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு ஜவுளி மற்றும் ஆடை தொழிலில் வலுவான நிலையில் உள்ளது.

நமது மாநிலம் நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பதனிடுதல், பின்னலாடை, ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. மேலும் நாட்டின் முன்னணி ஜவுளி உற்பத்தி மையமாக தமிழகம் விளங்குவதோடு இந்தியாவின் ஜவுளித் தொழில் சார்ந்த மொத்த வேலைவாய்ப்பில் 28 விழுக்காடும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 20 விழுக்காடு அளவிலான பங்களிப்பினை அளித்து வருகிறது. மேலும் ஜவுளித்துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு, ஜவுளித்துறையினை மேம்பாடு, விரிவாக்கம் செய்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த அறந்தாங்கியில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 1984 முதல் தனது உற்பத்தியினை தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அரசின் திட்டங்களான இலவச வேட்டி-சேலை, பள்ளி சீருடைகள் உள்ளிட்டவைகளுக்கான நூல் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு ரூ.50 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நூல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நூற்பாலையில் உள்ள பஞ்சு கலக்கும் இடம், நூற்புப் பிரிவு, நூலினை கோனாக சுற்றும் பிரிவு, இராட்டை சுற்றும் பிரிவு, பேக்கிங் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் பார்வையிடப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் சிறந்த தொழிலாளிக்கு ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.25,000 பரிசுத் தொகை வழங்கப்படும். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மருத்துவ வசதி பாதுகாப்பினை கருதி ரூ.1 இலட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு செய்யப்படும். மேலும் ஆலையில் பணிபுரியும் தினகூலி தொழிலாளர்களுக்கு விரைவில் சீருடை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 3 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை தொகை ரூ.13,47,258 மதிப்பிலான காசோலைகளையும், ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளிக்கு ஈட்டிய விடுப்பு தொகைக்கான ரூ.25,846 மதிப்பிலான காசோலையினையும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலைகளை காப்பாற்றினாலே போதும் என்ற நிலை தான் உள்ளது.18 கூட்டுறவு நூற்பாலைகள் இருந்த நிலையில் தற்போது ஆறு மட்டுமே செயல்படுகின்றன. இந்த ஆறு மில்களும் லாபத்தில் இயங்குகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட காலமாக கூட்டுறவு நூற்பாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 386 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரையும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாகத்தான் இதனை மேற்கொள்ள முடியும்.

மண்பானை சார்ந்த தொழில்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் உருவாக்கிட மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தொழில் கூடங்கள் அமைத்துக் கொடுப்பது குறித்து கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் காந்தி.

இந்நிகழ்வில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் மா.வள்ளலார், கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன், , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மேலாண்மை இயக்குநர் திருவாசகர், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!