கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லாத ரயில் சேவை: மத்திய அமைச்சர் துவக்கம்

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லாத ரயில் சேவை: மத்திய அமைச்சர் துவக்கம்
X

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லாத ரயில் சேவையை மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லாத ரயில் சேவையை மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவையை, கோவை ரயில் நிலையத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் , தமிழகத்தின் தொழில்துறை பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்பகுதிகளில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், கோவை- பொள்ளாச்சி இடையே இன்று துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, வேலைக்காக தினந்தோறும் கோவை-பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் என அவர் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் எல். முருகன், கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் 6000 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 800 கோடி ரூபாய் தான் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் அனைத்து மீட்பு குழுக்களும் பேரிடரின் போது தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது. அதேபோல் பொதுவாக பேரிடரை ஆய்வு செய்ய வரும் மத்திய குழு ஒரு வாரத்திற்கு பிறகு தான் வருவார்கள். இப்போது உடனடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!