அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,71,53 பேர், பெண் வாக்காளர்கள் 8,21,370 பேர், மூன்றாம் பாலினத்தவர் 295 பேர் என மொத்தம் 15,93,168 வாக்காளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதில் திமுகவை சேர்ந்த ஈஸ்வரசாமி , அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன், பாஜகவை சேர்ந்த வசந்தராஜன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாக்களிக்க வந்தார். அவர் தனது மனைவி வித்யா மற்றும் மகன் விகாஸ் உள்ளிட்டோர் உடன் நடந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
அதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நிலையில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மேலும் பாஜக மற்றும் திமுகவினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், ஜனநாயக முறைப்படி நேர்மையாக தாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம்.
பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது.மருத்துவக் கல்வியில் 7. 5% இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட திட்டங்களால் இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள். அதனால் அதிமுக மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu