பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு 2-ம் கருவறை: ஓய்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் உருக்கம்..!

பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு 2-ம் கருவறை: ஓய்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் உருக்கம்..!
X
கோவை தீத்திபாளையம் சத்குரு மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன்.
பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு 2-ம் கருவறை என, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் உருக்கமாக குறிப்பிட்டார்.

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இண்டஸ்டிரியல் சிட்டி சார்பில் கோவை, தீத்திப்பாளையம் சத்குரு மெட்ரிக் பள்ளியில் இன்ட்ராக்ட் சங்க தொடக்க விழா, மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் கனகரஜ் ராஜசேகர், ஷபியுல்லா, வக்கீல் பிரபு சங்கர், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அறங்காவலர்கள் பாலசுப்பிரமணியம் சாய்பிரியா, விஜயகுமார், கோகுல கார்த்திக் முன்னிலை வகித்தனர். முன்னாள் நீதிபதி பத்மனாபன் தொடக்க உரையாற்றினார், இதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், மாணவர்களுக்கு மரக்கன்று மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:

ஒருவர் வாழ்வில் அஸ்திவாரமாக இருப்பது பள்ளிக்கல்வி தான் . எதை நம் மனம் அதிகமாக நினைக்கிறோமா, எதை அதிகமாக விரும்புகிறோமோ, அதை நாம் நிச்சயம் அடைவோம். மாணவர்கள் தயாராக இருந்தால் ஆசிரியர் தோன்றுவார் என்பது இந்திய ஆன்மீக மரபு. இதைத்தான் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபி ஞானி ஜலாலுதீன் ரூமி, தாகம் கொண்டவர்கள் தண்ணீரை தேடுகின்றனர். தண்ணீரும் தேடுகிறது தாகம் கொண்டவர்களை... என்று கவிதை நயம்பட எழுதினார்.

அதனால் தான் , அய்யா அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். உங்கள் கனவு உங்களை உறங்க விடாமல் செய்ய வேண்டும். அதுவே நல்ல கனவு. நல்ல சிந்தனைகளை கற்று கொண்டவர்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தோற்பது இல்லை. மானுட குலத்தை நோக்கி, கற்க கசடற என அய்யன் திருவள்ளுவன் அறிவுறுத்தினார். நாம் கற்பவை என்பது நம் மன அழுக்குகளை போக்கும்படி இருக்க வேண்டும்.

எத்துணையோ சாதனை மனிதர்கள், தலைவர்கள் நல்ல வகுப்பறை இல்லாமல், நல்ல குடும்ப சூழல் இன்றி, வறுமையிலும் வாழ்க்கையை ஜெயித்துள்ளனர். அதனால், உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எனது அன்பு மாணவச் செல்வங்களே...நமக்கு கிடைத்த இந்த அழகான வகுப்பறை சூழலை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,

பாடப்புத்தங்களுடன் சேர்த்து, நல்ல அறம் சார்ந்த நூல்களையும், அறிவியல் நூல்களையும், நல்ல தலைவர்கள் வாழ்க்கை வரலாறு புத்தகங்களையும் நீங்கள் படிக்க வேண்டும். மொபைல் போனில் அதிக நேரம் மூழ்கி கிடப்பதை விட்டு, விளையாட்டு மைதானத்தில் உடல் ப்யிற்சிக்கு நேரத்தை அதிகம் செல்விட வேண்டும்.

கேள்வி கேட்டால் தான் பதிலும் சிந்தனையும், தெளிவும் ஏற்படும். மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளிக்கூடம் என்பது மாணவர்களின் இரண்டாவது கருவறை. ஆசிரியர்கள் தாயும் தந்தையுமாக இருந்து கல்வி அறிவையும், பரிவையும், கண்டிப்பையும் புகட்டுகின்றனர்.

மாணவர்களுக்கு நேரம் தவறாமை, உண்மை, தைரியம் நன்னடத்தையை ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். ராமேஸ்வரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, எவ்வித கல்வி பின்புலமும் இல்லாத, முன்னாள் ஜனாதிபதி கலாம் அய்யா, வாழ்வில் முன்னேற அவரது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணி அய்யரும், உயநிலைப்பள்ளி ஆசிரியர் அய்யாதுரை சாலமனும் தான் காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் உருக்கமாக பேசினார். இதைத்தொடர்ந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

Next Story
why is ai important to the future