கோவை அருகே 5 நாட்களுக்குப்பின் வனத்துறையின் கூண்டில் சிக்கிய சிறுத்தை
கூண்டில் சிக்கிய சிறுத்தை.
கோவை மாவட்டம், மதுக்கரையொட்டிய வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கி கொண்டது.
இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். குடோனை சுற்றி வலை விரிக்கப்பட்டும், குடோனில் 2 வாயில் பகுதிகளில் இரண்டு கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயன்றனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. எனினும் 5 தினங்களாக கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது.
கோவை வனத்துறையினரும் சிறுத்தை தானாக கூண்டில் வந்து சிக்கும் வரை பொறுமை காத்தனர். தினமும் மிக எச்சரிக்கை உணர்வுடன் இருந்த சிறுத்தை கூண்டிற்குள் வராமல் தவிர்த்தபடி இருந்தது. இந்நிலையில் 5 நாட்களாக உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் இருந்த சிறுத்தை உணவுக்காக வெளியேற குடோனில் இருந்து இன்று வெளியேற முயன்றது. அப்போது முன் பக்க வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கிக் கொண்டது.
இது குறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், 5 நாட்களாக இரவு, பகலாக தொடர்ந்து வனத்துறையினர் பொறுமை காத்துவந்த நிலையில் நள்ளிரவில் சிறுத்தை சிக்கியது. கடந்த இரு தினங்களாக கூண்டிற்குள் வந்த சென்ற சிறுத்தை சிக்காமல் இருந்தது. தானாக கூண்டு மூடிக்கொள்ளும் தன்மை இருந்தாலும் சிறுத்தை கூண்டிற்குள் வந்தவுடன் வனத்துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கூண்டை மூடியதால் இன்று சிறுத்தை சிக்கியது. தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவின் பேரில் கோவை மண்டல வனப்பகுதியிலேயே சிறுத்தையை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மயக்க ஊசி செலுத்தாமல் ஐந்து நாட்களுக்கு மேலாக பொறுமையாக சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தபடி இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu