கோவை குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோவை குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
X

 சுகுனாபுரம் குடியிருப்பு பகுதியில் மாலை நேரத்தில் நடமாடிய சிறுத்தை.

கோவை குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மதுக்கரை, சுகுணாபுரம், மயில்கல், ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. ஏராளமான குடியிருப்புகள் உள்ள இந்த பகுதிக்கு அடிக்கடி யானைகள் உள்ள வன விலங்குகள் வருவதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுக்கரை அருகே உள்ள சுகுனாபுரம் குடியிருப்பு பகுதியில் மாலை நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை நேரில் பார்த்த சிலர் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதனையடுத்து சுகுணாபுரம் கோலமாவு மலை பகுதியில் உள்ளவர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ப்பதற்காக தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தும் இதுவரை சிறுத்தையை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும். கால்நடை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!