ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கோவை குற்றாலத்தில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தொற்று பாதிப்பு கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இன்று முதல் கோவை குற்றாலம் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், கோவை, திருப்பூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.
கோவை குற்றாலத்திற்கு செல்வதற்கு முன்னதாக உள்ள சோதனைச் சாவடிகளில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் முக கவசம் அணிந்து உள்ளனரா? என்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். இதையடுத்து சுழற்சி முறையில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிக்க செல்வோர் 30 நிமிடங்கள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு அடுத்ததாக காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் அருவி உள்ள பகுதி அருவிக்குச் செல்லும் பாதைகளில் நீண்ட நேரம் நிற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதேபோல் ஒரே இடத்தில் குழுமி இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் உள்ளதா என்பதையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேரும், அதேபோல் 10 30 முதல் 11 மணி 12 முதல் 12 30 பிற்பகல் 1 30 முதல் 2 மணி வரை தலா 150 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu