திமுக வேட்பாளரை தாக்க முயற்சி : அதிமுகவினர் மீது புகார்
கோவை செல்வபுரம் பகுதியில் வாக்குசாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு திரும்பிய போது அமைச்சரின் சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட 50 பேர் தாக்க முற்பட்டதாக தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இன்று காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து வந்தேன். செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பார்வையிட்டு திரும்பியபோது அதிமுகவினர் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் மற்றும் பாஜகவினர் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தினர். காவல்துறையினரின் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். அங்கிருந்த காவலர்கள் அமைச்சருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சம்பவத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த இரண்டு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது என்றவர் தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து ஐ.ஜி., காவல்துறை ஆணையரிடமும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்த சிவசேனாதிபதி, தோற்று போவோம் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu