அற்புத திட்டம், யாரால் தோல்வி அடைந்தது? சிந்தித்து பாருங்கள் :' ஒஃபோ' வின் சமூக சேவை
'ஒஃபோ' வின் சமூக சேவை முடிந்த கதை தெரியுமா?
நகர வளர்ச்சி காரணமாக எரிபொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன; விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே தனி நபர் வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வாடகை அடிப்படையில், சைக்கிள் பகிர்வு திட்டத்தை செயல்படுத்த, கோவை மாநகராட்சி முடிவு செய்தது. சீன நிறுவனமான 'ஒஃபோ' இதனை செயல்படுத்த தயாராக உள்ளதாக முன் வந்தது. அந்த நிறுவனத்துடன் கைகோர்த்தது கோவை மாநகராட்சி. பரீட்சார்த்த முறையில் ஆர்.எஸ்.புரத்தில், கடந்த மார்ச் 3 ல் இத்திட்டம் துவக்கப்பட்டு, 50 இடங்களில் சைக்கிள் வழங்கப்பட்டது.
கோவை மாநகரில் உள்ள மக்களில் 55 சதவீதம் பேர் பொது வாகனங்களை பயன்படுத்திக்கொண்டும் மீதமுள்ள 45 சதவீதம் பேர் சொந்த வாகனங்களை வைத்துக்கொண்டும் நாள்தோறும் பயணிக்கின்றனர். இந்த நகரில் உள்ள சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்தும் பொருட்டு 'ஒஃபோ'(OFO) எனும் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 2000 சைக்கிள்களை இங்கே பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கோவை மாநகரின் பிரதானமான 50 இடங்களில் நிறுத்தி வைத்தது.
'ஓபோ' நிறுவன மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் மட்டுமே, சைக்கிள் 'லாக்'கை திறக்க முடியும். சைக்கிள் எங்கெங்கு பயணிக்கிறது என்பதை, ஜி.பி.ஆர்.எஸ்., தொழில் நுட்பத்தால், கண்காணிக்க முடியும். ஆகவே யாரும் திருட முடியாது என்ற நம்பிக்கையில், முன் பணம் வசூலிக்காமல், சைக்கிளை வழங்கினர்.
இந்த சைக்கிள்களை பயனாளர்கள் இலவலசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.. இப்படி பயன்படுத்திக் கொள்ள பயனீட்டாளர்கள் தங்களது மொபைல் போன்களில் அந்த நிறுவனத்தின் செயலியை தறவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியில் பயனீட்டாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.
இவர்கள் இந்த சைக்கிளை பயன் படுத்தும்போது அதில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு இந்த செயலி மூலம் மட்டுமே திறக்க அனுமதிக்கப் பட்ட பின்னர் அந்த எண்ணுடைய சைக்கிளை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.. இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஆர்எஸ் கருவியானது பயன்பாட்டாளர் அதனை எங்கே கொண்டு செல்கின்றார் என்ற விவரத்தை அந்த நிறுவனத்திற்கு காண்பிக்கும்.
சைக்கிள் ஒரு மாதத்துக்கு இலவசம் என்று கூறியதால், பலரும் ஆர்வமுடன் ஓட்டிப்பார்த்தனர். இந்நிலையில் இளைஞர்கள் புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். சிலர், தங்களது வீட்டுக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டனர். இலவச சைக்கிள் போல் பயன்படுத்தினர். சைக்கிளில் பதித்துள்ள 'பார்கோடு' மூலமாக, நிற்கும் இடத்தை கண்டறிந்து, மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆரம்பவிழா வெகு சிறப்பாக நடந்தேறி ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சைக்கிள்களை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், ஒரு சில நாட்களிலேயே சில சமூக விரோதிகள் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த பூட்டை உடைத்தும் ஜிபிஆர்எஸ் கருவியை செயலிழக்கச்செய்தும் எடுத்துக்கொண்டு போய் விட்டனர். சிலர் இதையும் தாண்டி, கொண்டு போன சைக்கிளை நிறம் மாற்றி ஃபாரின் சைக்கிள் என்று பேரம் பேசி விற்றும் விட்டனர். சிலர் சைக்கிள்களை கொண்டு சென்று எரித்தும் விட்டனர்.
இரண்டே மாதத்தில் 2000 சைக்கிள் 200 ஆக சுருங்கிப்போனது.பெரும் முதலீடு செய்த அந்த நிறுவனம், இழப்பை தாங்க முடியாமல், கோவையை விட்டு விடைபெற முடிவு செய்துள்ளது. எதிர்கால சந்ததியின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்ட அற்புதமான திட்டம், தோல்வி அடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் நோக்கமே முதற்கட்டமாக கோவையில் இந்த திட்டத்தை துவக்கி பின்னர் படிப்படியாக எல்லா நகரங்களுக்கும் கொண்டு சென்று ஓரளவு சுற்றுச்சூழலை கட்டுப் படுத்தவும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த தூரங்களுக்கு மக்கள் சைக்கிள்களை பயன்படுத்தி ஆரோக்கியம் பெறவும் ஆரம்பிக்கப்பட்டது.
இப்படி இரண்டு மாதத்தில் இந்த திட்டம் படு தோல்வி அடைந்ததால் அந்த நிறுவனம் இந்த திட்டத்தை தொடர விடாமல் கைவிட்டு விட்டது.. மேலைநாடுகளில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. பயனாளர்கள் இதுபோன்று சைக்கிள்களை சேதப்படுத்துவதும், திருடிக்கொண்டு சென்று தங்களது சொந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது சொத்துக்களை கொள்ளையடித்தல், திருடுதல் போன்ற செயல்களில் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள்.
சுய கட்டுப்பாடு, தன்ஒழுக்கம் எதுவும் இல்லாமல்இப்படி நம்மில் பலபேர்,பேருந்து மற்றும் இரயில் பெட்டிகளில் உள்ள சீட்டுகளில் தன்னுடையை பெயரையும் தன் காதலியின் பெயரையும் ஆணி கொண்டு கிழித்து எழுதுவது, கழிப்பறைகளில் அசிங்கமான படங்களை வரைந்து அதில் தன்னுடைய காதலியின் பெயரை எழுதுவது, சாலைகளின் ஓரங்களில் பெண்கள் நடந்து செல்லும் போதே கண்டுகொள்ளாமல் சிறுநீர் கழிப்பது, சாலை விதிகளை மதிக்காமல் நடப்பது,பொதுஇடங்களில் நாகரிகமின்றி நடப்பது, கண்ட இடங்களில் குப்பைகள் போடுவது எல்லாம் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு மாறாமல் இது தொடருமோ தெரியவில்லை.
மேலை நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்கின்றோம். மேலை நாட்டு உணவுவகைகள், மேலைநாட்டு உடைகள், மேலைநாட்டு நாகரீகங்கள் இவற்றை எல்லாம் உடனே பின்பற்றக் கற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் நமக்கு அவர்களது சுய ஒழுக்கத்தையும், அந்த நாட்டு அரசாங்கம் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் விதிமுறைக ளையும் அவர்களைப்போல் இங்கே பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, ஷூ மாட்டிக்கொண்டு பீட்சா, .பர்கர், கே.எஃப்.சி. சிக்கனை கடித்து விட்டு கோக் குடித்துவிட்டால் மட்டும்... மேலைநாட்டு கலாச் சாரத்தை பின்பற்றுவதாக கருதிவிடக்கூடாது.
நாமும் அவர்களைப்போல் கட்டுப்பாடோடு, தனி மனித ஒழுக்கத்தோடு வாழவேண்டும் எனும் எண்ணம் மக்களுக்கு ஏற்படும் வரை அரசாங்கம் அல்லது தனியார் செய்யும் எந்த நலப்பணித்திட்டங் களும் இப்படித்தான் மண்ணோடு மண்ணாகிப் போய்விடும்..அரசாங்கத்தை மட்டும் குறை கூறிப்பயனில்லை.
மக்களும் பெரும்பாலான விஷயங்களில் திருந்த வேண்டும்..மக்களின் மாற்றம்தான் ஒரு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமே தவிர வேற எந்த சட்ட திட்டங்களும், விதிமுறைகளும், கடுமையான தண்டனைகளும் பயனளிக்காது.
புதிய பல திட்டங்கள் கொண்டு வரும் போது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது. எனவே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திட்டங்களை போதிய திட்டமிடலும் அமல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu