கோவை இளைஞரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசில் புகார்
செங்கல்பட்டு மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் (வயது 27). பட்டதாரி இளைஞரான இவர், சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அந்த புகாரில், தான் கோவையில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். நான் ஆன்லைனில் அன்னிய செலாவணி வர்த்தகம் செய்வது தொடர்பாக பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது எனது செல்போனுக்கு ஒரு ஆன்லைன் லிங்க் வந்தது. இதனையடுத்து அந்த லிங்கை எனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டேன். அதன் பின்னர் அன்னிய செலாவணி வர்த்தகம் செய்ய முடியும் என குறுஞ்செய்தி வந்தடைந்தது.
அதன் பின்னர் ஆகாஷ் லாவண்யா, திலிப் சிங் ஆகிய இருவரும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது இருவரும் வாட்ஸ்அப் மூலம் அன்னிய செலாவணி வர்த்தகம் தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கினர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் கூறியபடி செல்போனுக்கு வந்த லிங்க்கின் மூலம் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே கை நிறைய சம்பாதிக்கலாம் என 2 பேரும் ஆசை வார்த்தைகளைக் கூறினர்.
அவர்கள் கூறியதையடுத்து, இதனை உண்மை என நம்பி நானும் என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரையும் எனது செல்போன் செயலியுடன் இணைத்து அன்னிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்தேன்.
அதன்படி, நான் மொத்தம் அன்னிய செலாவணி வர்த்தகத்துக்காக ரூ.18,67,000 முதலீடு செய்து இருந்தோம். இதனைத்தொடர்ந்து நாங்கள் கடைசியாக முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த நாங்கள் ஆகாஷ் லாவண்யா, திலிப் சிங் ஆகியோரை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் 2 பேரும் நாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாமல் செய்து விட்டனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu