கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தவிர்க்க, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 4 ஆயிரத்து 650 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளருக்குக் குறிப்பிட்ட கட்சியினர் பணப் பட்டுவாடா செய்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பணத்தை வாங்க மறுத்த மக்களை, சில அரசியல் கட்சியினர் மிரட்டுவதாகக் கூறி, கோவையில் பல்வேறு பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.
இது குறித்து புகார் அளிக்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “ஓட்டுக்குப் பணம் வாங்கவில்லை என்றால் மகளிர் உரிமை தொகையை ரத்து செய்வதாக மிரட்டுகின்றனர். மேலும் அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப் போட விட்டால், வீட்டில் மின்சாரத்தையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்தவர்களின் தகவலைத் தனியாகச் சேகரித்து வைத்துள்ளனர். குறிப்பாக ஆனைக்கட்டி பகுதியில் சரியான போக்குவரத்து இல்லாததால் அந்த பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை. இதனைப் பயன்படுத்தி, மக்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர்.
சாதாரண பொதுமக்கள் கடைவீதியில் ஏதாவது வாங்கச் சென்றால் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர். ஆனால் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து வருவதை தடுத்து நிறுத்தவில்லை” என்று குற்றம் சாட்டினர்.
முன்னதாக நேற்றிரவு இதே கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் பகுதியில், பணப் பட்டுவாடா செய்ததாக கூறி, திமுக-வை சேர்ந்தவர்களை பாஜகவினர் பிடித்துத் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu