கோவையில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பைல் படம்.
கொரோனா தொற்றுக்கு முன்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த பின்னரும் விமானங்கள் இயக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2020, 2021-ம் ஆண்டு மே மாதங்களில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே கோவையில் இருந்து இயக்கப்பட்டன. 2022-ம் ஆண்டில் படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
பயணிகளின் வரவேற்பை பொருத்து விமானங்களின் எண்ணிக்கை 13,15 18 என படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு முழுவதும் பெரும்பாலும் தினமும் 22 அல்லது 23 விமானங்கள் மட்டுமே அதிகபட்சமாக இயக்கப்பட்டன. தற்போது பல மாதங்களுக்கு பின்னர் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, பூனே, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகள் காரணமாக தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் நாட்களில் விமான சேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu