தமிழகத்தை பொருளாதாரத்தில் உயர்த்த கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானது -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை பொருளாதாரத்தில் உயர்த்த கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானது -முதல்வர் ஸ்டாலின்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (19.5.2022) கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 

தொழில்துறையில் சிறப்பு வாய்ந்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதில் சிறு குறு நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது -முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (19.5.2022) கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஏ. கல்பனா ஆனந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தொன்மையான பாரம்பரியமும் தொழில் வளமும் மிகுந்த இந்தக் கோவை மாநகரில், உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய தமிழகத்தினுடைய தொழில் துறைக்கு நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தொழில்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் உணர்வுபூர்வமாக ஈடுபட்டு, கடும் உழைப்பையே பெரும் முதலீடாக வழங்கி, இன்று தொழிலதிபர்களாக, பல ஆயிரம் நபர்களுக்கு வேலை வழங்கி, இப்பகுதி செழிக்க சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களைத், வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தொழில் நிறுவனம் நடத்துவதன் மூலமாக இந்த மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பொருளாதாரச் சேவையை ஆற்றி வரும் உங்களது பணிகள் மேலும் சிறக்க வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.

இதமான தட்பவெப்பமும் - மிதமான குளிர்ச்சியும் கொண்ட நகரம் இந்தக் கோவை. இது மக்களின் பழக்க வழக்கங்களிலும் நிச்சயமாகத் தெரியும். அந்த வகையில் குணத்தால் - மனத்தால் இதமான கோவைக்கு நான் வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரம் என்னவென்று கேட்டீர்களென்றால் அது கோவை மாநகரம் தான். ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரணக் கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்த நகரம் இந்த கோவை நகரம் தான்.

இந்தத் தொழில்தான் என சொல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக இந்தக் கோவை இருக்கிறது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் இந்தக் கோவை.

கோயம்புத்தூரில் 700-க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையான வெட் கிரைண்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இவற்றுக்கு "கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்" என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதே இதன் பெருமைக்கு சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாகவும் இந்த கோவை மாநகரம் உருபெற்றுள்ளது. இந்நகரத்தில் உள்ள டைடல் பூங்கா மற்றும் பிற திட்டமிடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம், உலக அளவில் அவுட்சோர்சிங் நகரங்களில் ஒரு முக்கிய இடத்தை இந்த நகரம் தற்போது பிடித்திருக்கிறது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் நடைபெற்ற நான்கு மாநாடுகளில் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. ஏனென்றால், தமிழ்நாட்டின் தொழில் துறையினுடைய மிக முக்கிய தூண்களில் ஒன்று இந்தக் கோவை மாவட்டம் என்பதற்காகத்தான்.

கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்கு, இந்த மேற்கு மண்டலத்தின் தொழில் முன்னேற்றத்திற்கு, கோவை விமான நிலையத்தின் விரிவாக்கம் அவசியம் தேவை. இதனை உணர்ந்து, இந்த விமான நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான பணிகளை நம்முடைய கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

இந்தப் பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. கடந்த ஆட்சிக் காலத்தின் போது பத்தாண்டு காலமாக சரியான முன்னேற்றம் இல்லாமல் தொய்வடைந்திருந்த அந்தப் பணிகளை இப்போது முடுக்கிவிட்டு, இதற்காக 1,132 கோடி ரூபாயை நாம் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

இந்தப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக, சென்னைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் உயர்த்தப்படும்.

தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இந்த அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

வளம்மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில், புத்தாக்கம், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக (New Hub for Emerging Technologies) கோயம்புத்தூர் உருவாக்கப்படும்.

இதற்காக தகுந்த ஆலோசகரை நியமித்து, விரிவான திட்டம் ஒன்று தயாரிக்கப்படும். இந்த விரிவான திட்டம், கோவைக்கான புதிய பெருந்திட்டமாக இருக்கக்கூடிய (New Master Plan) ஒருங்கிணைக்கப்படும். கோவை நகரின் கட்டமைப்புத் தேவைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில், இந்தப் பகுதிக்கான புதிய பெருந்திட்டம் (Master Plan) உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை (Research Parks) நிறுவ ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி, அறிவு சார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரையில், 69 ஆயிரத்து 375 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும் 2 இலட்சத்து 25 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழில் துறையின் வளர்ச்சிக்கு இந்த அரசு மேற்கொண்டுவரும் சீரிய முயற்சிகளுக்கு அத்தாட்சியாக, அண்மையில், ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலீட்டிற்கான சந்திப்பில், நமது தொழில் துறையின் வழிகாட்டி (GUIDANCE) நிறுவனம், ஆசியா-ஓசியானியா மண்டலத்தின் "சிறந்த முதலீட்டு ஊக்குவிப்பு முகமைக்கான" விருதை வென்றுள்ளது என்பதை நான் பெருமையுடன் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நமது மாநிலம் தொடர்ந்து தொழில் வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும். அது மட்டுமல்ல, தொற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வசதி வாய்ப்புகளை தொழில் துறையினர் அனைவரும் நன்கு பயன்படுத்தி, மேன்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தொழில்துறையில் சிறப்பு வாய்ந்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதில் சிறு குறு நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது.

தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றக்கூடிய இந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு தனிக்கவனம் அளித்து வருகிறது.

சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலீட்டு மானியத்திற்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக, ரூபாய் 360 கோடி ஒதுக்கப்பட்டு, 3 ஆயிரத்து 545 நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு, திட்டமாக செயல்படுத்துவதற்கு சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 568 பயனாளிகளுக்கு ரூபாய் ஆயிரத்து 101 கோடி வங்கிக்கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசு மானியம் 285 கோடியே 38 இலட்சம் ரூபாய் ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூபாய் 911.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லாக் கடன் எளிதில் பெற ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கிய தேவையான தொழில் மனைகளை குறைந்த விலையில் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துங்க கொண்டு வருகிறது.

தமிழ்நாடு சிட்கோ நிர்வகித்து வரும் 122 தொழிற்பேட்டைகளில் அதிக விலை மதிப்பின் காரணமாக 371 ஏக்கர் பரப்பளவில் 1341 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இதை நிவர்த்தி செய்யும் விதமாக திருத்திய மனை மதிப்பீட்டு கொள்கையின்படி, குறிப்பிட்ட தொழிற்பேட்டைகளில் மனை மதிப்பானது 5 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் 140 கோடியே 14 இலட்சம் மதிப்பிலான 553 தொழில்மனைகள் மற்றும் 17 தொழிற்கூட அலகுகள் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் 81.85 ஏக்கர் மொத்தப் பரப்பில் 162 தொழில்மனைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் நான்கு மாவட்டங்களில் 394 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 218 கோடி மதிப்பில் 4 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைப் பொறுத்தமட்டில் தொழில் நிறுவனங்களின் நலனைப் பாதுகாத்திடுவதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த நிதியாண்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 364 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூபாய் 35 கோடியே 57 இலட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின்கீழ் 367 தொழில் முனைவோர்களுக்கு 12 கோடியே 25 இலட்சம் ரூபாய் மானியத்துடன் 49 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் 18 கோடியே 13 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் 9 கோடியே 6 இலட்சம் ரூபாய் அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை கொசிமா (COSIEMA) மூலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஏற்றுமதி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 10 ஏற்றுமதி மையங்களில் 4 மையங்கள் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், மற்றும் கரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

கயிறு உற்பத்தியில் தமிழ்நாடு, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கயிறு உற்பத்தித் தொழிலில், உழவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் வருமானத்தைப் பெருக்கிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (Geo Textiles) மற்றும் தென்னை நார் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்தவும், மாநிலம் முழுவதும் கயிறுத் தொழில் குழுமங்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். இதற்கு, முதற்கட்டமாக ரூபாய் 5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாக மூன்று மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஈரோட்டில், மண்டல புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் ரூபாய் 3.5 கோடி மதிப்பில் மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கவும் - ஈரோடு மாவட்டம், பவானியில் ரூபாய் 3.5 கோடி மதிப்பில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கவும் - திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு பங்களிப்பு ரூபாய் 10 கோடியோடு, 16 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டாரத்தில் 5 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் 6 கோடியே 93 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும் ஒரு கயிறு குழும பொது வசதி மையம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு மாவட்டங்களில், இயற்கை இழைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியமான ஜவுளிகளின் ஏற்றுமதி அதிக அளவில் உள்ள போதிலும், உலகளவில் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவை மிக வேகமாகவும், சீராகவும் அதிகரித்து வருகிறது. எனவே, இவ்வாறான மதிப்புக்கூட்டு ஜவுளிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள நீங்கள் முன்வரவேண்டும் என்று உங்களை இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் உலகம் முழுவதும் மூழ்கியுள்ளது. "சிப்" என்று அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலக்ட்ரானிக் சாதனமே இல்லை என்றே சொல்லலாம்.

தகவல்தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகளின் அடிப்படையிலே உலகளவில் அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செமி-கண்டக்டர்களின் தேவை முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது.

உலகளவில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது சிப் தேவைக்காக, சீனா, தைவான் போன்ற ஒரு சில நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த சூழலை நன்கு பயன்படுத்தி தமிழ்நாட்டில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

கோவையை முனையமாக வைத்து செயல்படுத்தப்பட்டு வரும் வான்வழி மற்றும் பாதுகாப்புத் தொழில் பெருவழித்திட்டத்தில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தியையும் மேற்கொள்ள வேண்டும்.

சூலூரில் அமைக்கப்பட உள்ள தொழிற்பூங்காவிலும் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நூல் விலை உயர்வு நமது மேற்கு மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பலர் தங்கள் வேலையை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். கச்சா பொருள்களின் வரலாறு காணாத உயர்வால், பலர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதன் தீவிரத்தை உணர்ந்த நான், பிரதமர் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களுக்கும் நான் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் தங்கை கனிமொழி, எம்.பி., அவர்கள் தலைமையில் மேற்கு மாவட்டங்களைச் சார்ந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து டெல்லிக்கு நேற்று சென்று ஒன்றிய அமைச்சர்கள் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும், திரு.பியுஷ் கோயல் அவர்களையும் நேரிலே சந்தித்து அந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். உங்கள் கவலைகளை விரைந்து தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த அரசு எடுத்துக்கொண்டு வருகிறது. கோவையில் வந்து நான் இறங்கியவுடன், உடனடியாக ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் திரு.பியுஷ் கோயல் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன், உங்கள் சார்பாக அந்தக் கோரிக்கையை நான் எடுத்து வைத்திருக்கிறேன்.

அதிக முதலீடுகளை மேற்கொண்டு, தயாரிப்புகளை பலப்படுத்துங்கள், -பல்வகைப் படுத்துங்கள் - விரிவாக்கத்தை மேற்கொள்ளுங்கள் - மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள் - என்று முதலீட்டாளர்களுக்கு நான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். இதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்முனைப் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி செயல்படுங்கள். போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில் உங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்துத் தொழில் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழிலில் மட்டுமல்ல, சமூகத்திலும் மாற்றம் ஏற்படுத்துவதாக உங்களது பணிகள் நிச்சயமாக இருக்க வேண்டும்.

உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி, இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை! இவை மேம்பட்டால், ஒரு மாநிலத்திற்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும். இவை மூன்றையும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இது போன்ற சந்திப்புகளின் மூலமாகத் தான் பெற முடியும். இதுதான் இந்த சந்திப்புக்கான உண்மையான நோக்கம்.

இந்தச் சந்திப்பானது உங்கள் தொழிலை மட்டுமல்ல, இந்த மாநிலத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதாக அது அமைய வேண்டும். எதிர்காலத்திற்கு நாம் தயாராக இருந்திட வேண்டும். உலகத்தரத்தில் போட்டியிட நம்மை தகுதிபடுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தேவையான மாற்றங்களை உள்வாங்க வேண்டும்!

அத்தகைய மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கத்தான், இந்தச் சந்திப்பை நமது தொழில் துறை ஏற்பாடு செய்துள்ளது எங்கள் அழைப்பை ஏற்று பெருமளவில் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், என முதலமைச்சர் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!